கோவில் மீது ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து சாவு
நாச்சியார்கோவில் அருகே கோவில் மீது ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
திருவிடைமருதூர்;
நாச்சியார்கோவில் அருகே கோவில் மீது ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார்.திருவிழா பார்க்க சென்றவருக்கு நேர்ந்த இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கோவில் திருவிழா
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வில்லியவரம்பல் கிராமத்தில் மகா மீனாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி சாமி புறப்பாடு மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.கோவில் திருவிழாவில் வாணவேடிக்கையை பார்ப்பதற்காக திருநாகேஸ்வரம் ஹைஸ்கூல் தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மோகன் மகன் தமிழ்வளவன் என்கிற பிரவீன்( வயது 27) சென்றார்.
தவறி விழுந்து சாவு
அப்போது அவர் கோவிலின் பின்புறம் மேல் பகுதியில் உள்ள சிங்கம் சிற்பத்தை பிடித்து கோவில் மீது ஏற முயன்றார். அப்போது அந்த சிற்பம் உடைந்தது. இதனால் தமிழ்வளவன் கீழே தவறி விழுந்தார்.இதில் தலையில் பலத்த அடிபட்ட தமிழ் வளவனை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.