பண்ருட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ.2½ லட்சம் நகை பறிப்பு லிப்டு கொடுத்து உதவி செய்வது போல் நடித்து வாலிபர் கைவரிசை
பண்ருட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் லிப்டு கொடுத்து உதவி செய்வது போல் நடித்து ரூ.2½ லட்சம் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
விழுப்புரம் கிழக்கு காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் உமர்பேக். இவரது மனைவி ஜமீனா(வயது 55). இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
ஜமீனா தினசரி விழுப்புரத்தில் இருந்து பஸ்சில் புறப்பட்டு ராஜபாளையம் குறுக்கு ரோட்டில் இறங்கி பின்னர் அங்கிருந்து நடந்தோ அல்லது அவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்டு கேட்டோ பள்ளிக்கு செல்வது வழக்கம்.
பின்னர் பள்ளி முடிந்ததும் மீண்டும் அதேபோன்று ராஜபாளையம் குறுக்கு ரோட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நகை பறிப்பு
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பனப்பாக்கத்தில் இருந்து ராசாப்பாளையத்திற்கு செல்ல அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரிடம் ஜமீனா லிப்ட் கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபரும் ஜமீனாவை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ராசாப்பாளையம் குறுக்குரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். ராசாப்பாளையம் மெயின்ரோடு அருகே வந்ததும் அந்த வாலிபர் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது ஆசிரியை ஜமீனா கீழே இறங்கியதும், அந்த நபர் திடீரென ஜமீனா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வலைவீச்சு
இதனால் அதிர்ச்சியடைந்த ஜமீனா இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
லிப்டு கொடுத்து உதவி செய்வது போல் நடித்து ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.