மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அடித்துக்கொன்றது அம்பலம்
ஒரத்தநாடு அருகே ஆற்றில் வாலிபர் பிணமாக மிதந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அடித்துக்கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே ஆற்றில் வாலிபர் பிணமாக மிதந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அடித்துக்கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆற்றில் வாலிபர் பிணம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கக்கரக்கோட்டை ராஜாமடம் கிளை ஆற்று வாய்க்காலில் கடந்த 17-ந் தேதி வாலிபர் ஒருவர் தலையில் காயத்துடன் பிணமாக மிதந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.இது குறித்து ஒரத்தநாடு போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் தஞ்சை ஆடக்கார தெருவை சேர்ந்த காஜாமைதீன் மகன் முகமது யாசிக் (வயது 34) என்று தெரிய வந்தது.
நண்பர்களிடம் விசாரணை
மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் முகமது யாசிக், தஞ்சை பூக்காரத்தெருவை சேர்ந்த ஷாஜகான் மகன் சாகுல் அமீது(23) மற்றும் தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக்(42) ஆகிய 3 பேரும் நண்பர்கள் என்றும், இவர்கள் கடந்த 16-ந் தேதி ஒன்றாக ஸ்கூட்டரில் வெளியே புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து சாகுல்அமீது, கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அடித்துக்கொலை
போலீசாரின் தீவிர விசாரணையில் முகமது யாசிக்கை அவரது நண்பர்களே அடித்துக்கொன்றது தெரிய வந்தது. கடந்த 16-ந் தேதி மாலை முகமது யாசிக், சாகுல் அமீது, கார்த்திக் ஆகிய மூவரும் ஈச்சங்கோட்டை அருகில் உள்ள கல்லணைக்கால்வாய் புது ஆற்றங்கரையில் ஒன்றாக அமர்ந்து மது குடித்து உள்ளனர். அப்போது முகமது யாசிக்கிற்கும், சாகுல் அமீதுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு உள்ளது.அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அத்துடன் கார்த்திக், சாகுல்அமீது ஆகிய இருவரும் சேர்ந்து முகமது யாசிக்கை கற்களால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முகமது யாசிக் ரத்த வெள்ளத்தில் அருகில் உள்ள ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார்.மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி சாகுல் அமீது, கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.கொலை செய்யப்பட்ட முகமது யாசிக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார் என்பதும், இவருக்கு பர்வீன் என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.