விபத்தில் மூளைச்சாவு அடைந்த நாகை வாலிபர் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் மூளைச்சாவு அடைந்த நாகை வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
x

விபத்தில் மூளைச்சாவு அடைந்த நாகை வாலிபர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவை மதுரை, பெரம்பலூர் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

விபத்தில் மூளைச்சாவு அடைந்த நாகைவாலிபர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவை மதுரை, பெரம்பலூர் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய வாலிபர்

நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய ஒரே மகன் முகேஷ் (வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், நாகையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் புகைப்படக்காரராக பணி புரிந்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் கொளப்பாடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார்.பின்னர் அங்கிருந்து கடந்த 4-ந் தேதி அதிகாலையில் தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திருப்பூண்டி காரைநகர் அருகே வந்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த முகேசை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மூளைச்சாவு

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு முகேஷ் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முகேஷ் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து முகேஷ், மூளைச்சாவு அடைந்த விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர்.தனது ஒரே மகனை விபத்தில் இழந்து விட்டோமே என பெற்றோர் கதறி அழுதனர். மேலும் முகேஷ்சின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து டாக்டர்கள் எடுத்துரைத்தனர். இதனையடுத்து முகேஷின் பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து உடல் உறுப்புகளை தேவைப்படும் நபர்களுக்கு வழங்க டாக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் தமிழ்நாடு உடல் உறுப்பு ஆணையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

உடல் உறுப்புகள் தானம்

அதன்படி சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்புகள் வெளியே எடுக்கப்பட்டு, மருத்துவ பெட்டிகளுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த உடல் உறுப்புகளை எடுத்து செல்ல அந்தந்த ஆஸ்பத்திரிகளில் இருந்து டாக்டர்கள் குழுவினர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களிடம் உடல் உறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஒரு சிறுநீரகமும், மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு சிறுநீரகமும், மதுரை அரசு கண்ஆஸ்பத்திரிக்கு இரு கண்களும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கல்லீரலும் ஆம்புலன்ஸ் மூலம் துரிதமாக கொண்டு செல்லப்பட்டது.

பிறரை வாழவைக்கும்

இது குறித்து முகேஷின் உறவினர் கணேசன் கூறும்போது, முகேஷ் உறவினர் வீட்டுக்கு சென்றபோது சாலை விபத்தில் படுகாயம் அடைந்ததால் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில் நாகை டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த நிலையில் முகேஷ் மூளைச்சாவு அடைந்து விட்டார் என்றதும், பெற்றோர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்திட முன்வந்ததையடுத்து பல்வேறு நபர்களுக்கு பொருத்துவதற்காக உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன. முகேஷ் இறந்தாலும் அவரது உடல் உறுப்புகள் பிறர் மூலம் வாழும் அவர்களையும் வாழ வைக்கும் என்றார்.


Next Story