'அக்னிபத்' விவகாரம் சென்னையில் மீண்டும் போராட்டம் நடத்த இளைஞர்கள் திட்டம்


அக்னிபத் விவகாரம் சென்னையில் மீண்டும் போராட்டம் நடத்த இளைஞர்கள் திட்டம்
x

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் மீண்டும் சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனை தடுப்பதற்காக போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. ராணுவ பணியில் சேருவதை கனவாக எண்ணிய இளைஞர்கள் மத்தியில் இந்த திட்டம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தமிழகத்திலும் இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் பரவி உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோவை, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் சென்னை தலைமை செயலக வளாகம் செல்லும் வழியில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். சென்னையில் தடையை மீறியோ, அனுமதி இன்றியோ போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வது வழக்கம். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.

மீண்டும் போராட்டம்

இந்தநிலையில் இந்த திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் மீண்டும் போராட்டம் தொடர வாய்ப்பு இருப்பதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே சென்னை பல்லவன் இல்லம் அருகே அமைந்துள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு, போர் நினைவுசின்னம் ஆகிய இடங்கள் செல்லும் வழியை போலீசார் நேற்று முடக்கி வைத்து, தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

மேலும் மெரினா கடற்கரை, கவர்னர் மாளிகை உள்பட இடங்களிலும் போலீசார் உஷார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் குவிப்பு

தென் பிராந்திய ராணுவ மைய அலுவலகம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ளது. எனவே தலைமை செயலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமை செயலகம் வருபவர்கள் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

போர் நினைவு சின்னம் செல்லும் நேப்பியர் பாலம் சாலை தடுப்புகள் கொண்டு மூடப்பட்டதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த போக்குவரத்து மாற்றத்தால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஆனால் இன்று இதே போன்று இந்த சாலைகள் மூடப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


Next Story