செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்
பொறையாறு அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில ஏறி நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொறையாறு:
பொறையாறு அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில ஏறி நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன் (37). சமூக ஆர்வலரான இவர் இலுப்பூர் ஊராட்சியில் நீர்நிலைகள் மற்றும் அதன் வழிகளை மீட்கவும், நீராதார நிலைகளை பாதுகாத்திட வேண்டியும், கடந்த ஆண்டு ஆற்றின் நடுவே தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். சில மாதங்களுக்கு முன்பு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்களே தவிர நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கதிரவன் பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கடைவீதியில் உள்ள 120 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் நேற்று இரண்டாவது முறையாக மீண்டும் ஏறி கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தை
2 மணி நேரத்திற்கு மேலாக செல்போன் கோபுரத்தில் நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, மற்றும் போலீசார் தரங்கம்பாடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அருண்மொழி சம்பவ இடத்திற்கு வந்து கதிரவனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு கதிரவன் உடன் படாததால் போராட்டம் நீடித்தது.
தொடர்ந்து தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என செல்போன் மூலம் பேசி உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து கதிரவன் தனது போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.