சாராயம் கடத்திய வாலிபர் கைது
நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது
நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படியும்,சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மேலவாஞ்சூர் சோதனை சாவடி அருகே தனிப்படை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீ்சார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை பார்த்தவுடன் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். அப்போது ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரை நாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், நாகை வெளிப்பாளையம் தாமரைகுளம் கீழ் கரை பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரமேஷ் (வயது32) என்பதும், இவர் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து அவரிடம் இருந்து 215 சாராய பாட்டில்களும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.மேலும் தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில்கள், 2 மோட்டார் சைக்கிள்களையும் பார்வையிட்டார்.