இளைஞர் எழுச்சி தொடர் பரப்புரை கூட்டம்
திருப்பத்தூரில் இளைஞர் எழுச்சி தொடர் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 'எங்கே எனது வேலை' என்ற தலைப்பில் இளைஞர் எழுச்சி தொடர் பரப்புரை பயண விளக்க கூட்டம் திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் டி.முரளி தலைமை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.சி.சாமிக்கண்ணு, முல்லை, தேவதாஸ், முருகன், ஆனந்தன், சங்கர் உள்பட பலர் பேசினார்கள். இந்த தொடர் பிரசார பயணத்தில் வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க பகத்சிங் தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்று, வேலை கொடு அல்லது வேலை கொடுக்கும் வரை மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் கொடு, மத்திய, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு வேலை வாய்ப்புகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடு, வேலை வாய்ப்புகளில் ஒப்பந்த மற்றும் அவுட் சோர்சிங் முறையினை ரத்து செய்து, நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைத்திடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
மாதனூரில் தொடங்கிய இந்த பயணம் சோமலாபுரம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, புதுப்பேட்டை, கந்திலிசென்று திருப்பத்தூரில் முடிவடைந்தது. முடிவில் நகர துணைச் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.