சேலத்தில் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-தண்டால் எடுத்து இளைஞர்கள் எதிர்ப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேலத்தில் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தண்டால் எடுத்து இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
இந்திய ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் 5 ரோடு அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.
மாநகர குழு உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் பிரவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் ராமச்சந்திரன், குருபிரசன்னா, முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராகவும், அந்த திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
தண்டால் எடுத்து எதிர்ப்பு
இதேபோல் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், துணை தலைவர்கள் பாலன், வெற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் ராணுவத்தில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள 'அக்னிபத்' திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதேநேரத்தில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர், தண்டால் எடுத்தும், பல்வேறு உடற்பயிற்சி செய்தும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேகோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.