சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி சீமான் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும், சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது என்றும் சீமான் அறிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பேரியக்கம் கடந்த 11 ஆண்டு காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வுகளும் அபரிமிதமானது. அசாதாரணமானது. முற்போக்கு அரசியலால் தமிழக அரசியலின் போக்கையே மொத்தமாய் மாற்றி, அரசியல் திசையைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருக்கிறது.
2010-ம் ஆண்டில் கட்சி தொடங்கியபோதும் மக்களுக்கான களத்தில் நின்று மக்களுக்கானவர்கள் என நிரூபித்துவிட்டே, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக களம்கண்டது நாம் தமிழர் கட்சி. பாலியல் சிறுபான்மையினரான திருநங்கையைத் தேர்தல் களத்தில் நிறுத்தியது. வாக்கு அரசியலுக்காக வேலை செய்திடாது, நாளைய தலைமுறையினருக்கான மாற்று அரசியலை முன்வைத்து சமூகக்கடமை ஆற்றியது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கி பாலியல் பேதம் முறித்து நின்றது.
தனித்து போட்டி
முன்மாதிரியான அரசியலை முன்வைத்து, முற்போக்கை முழுவதுமாக கடைபிடித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை கட்டியெழுப்புகிற நாம் தமிழர் கட்சியின் அடுத்தக் கட்டப்பாய்ச்சலாக, அதிகாரத்தை அடையும் பெரும்போரில் வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலை சமரசமின்றி எதிர்கொண்டு தனித்து சமர்க்களம் புகுகிறது நாம் தமிழர் கட்சி.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் மக்களை அரசியல்படுத்தி, அதனூடே வாக்குகளைப் பெற்று ஜனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, இச்சட்டமன்றத் தேர்தலிலும் வழக்கம்போல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி, தனித்தே களமிறங்குகிறது.
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்
வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிட இருக்கிறோம். அந்நிகழ்வில் பெருந்திரளெனக் கூடி, நமது வெற்றியை முரசறிவிக்க வேண்டுமென இனமானத் தமிழர்களை அழைக்கிறோம். இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம். புரட்சி எப்போதும் வெல்லும், நாம் தமிழர் ஆட்சி அதனைச் சொல்லும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story