இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் மளிகை கடனையும் ரத்து செய்து இருப்பார் எடப்பாடி பழனிசாமி ப.சிதம்பரம் தாக்கு


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் மளிகை கடனையும் ரத்து செய்து இருப்பார் எடப்பாடி பழனிசாமி ப.சிதம்பரம் தாக்கு
x
தினத்தந்தி 2 March 2021 2:49 AM GMT (Updated: 2 March 2021 2:49 AM GMT)

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் மளிகை கடனையும் ரத்து செய்து இருப்பார் எடப்பாடி பழனிசாமி என்று ப.சிதம்பரம் கூறினார்.

திருப்புவனம், 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்று மதியம் 3 மணிக்கே அவசரம், அவசரமாக பேனா, பென்சில் எடுத்து கடன் தள்ளுபடி அறிவிப்பை எழுதி அறிவித்துவிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தால் மளிகை கடன் ரத்து, நண்பர்களிடம் வாங்கிய கைமாற்று கடன் ரத்து எனவும் அறிவித்திருப்பார்.

ஏமாற்றும் அறிவிப்பு

எத்தனை மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன, எத்தனை ஆயிரம் கோடி கடன் கொடுக்கப்பட்டது, அதில் முதல் எவ்வளவு, நிலுவை எவ்வளவு, வட்டி எவ்வளவு என்று எதுவும் தெரியாமலும் தொகை ஒதுக்கீடு செய்யாமலும் மகளிர் சுயஉதவி குழுவினரின் கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டார்.

பட்ஜெட் 5 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்து விட்டார்கள். கணக்கு எல்லாம் முடித்து விட்டார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் கடன் தள்ளுபடி என்று அறிக்கை விடுகிறார். கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி என்கிறார். எத்தனை ஆயிரம் பேருக்கு, எத்தனை லட்சம் பேருக்கு, எவ்வளவு கோடி கடன் தள்ளுபடி என தொகையை ஒதுக்காமல் அறிவிக்கிறார். இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் அறிவிப்பாகும். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் வெற்றுப்பேச்சு. அ.தி.மு.க. அரசு வெற்றி நடைபோடும் அரசு அல்ல, வெற்றுப் பேச்சு அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story