அதிமுக-பா.ஜ.க. தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை


அதிமுக-பா.ஜ.க. தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 2 March 2021 8:21 AM IST (Updated: 2 March 2021 8:21 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக-பா.ஜ.க. தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை

பா.ஜ.க., தே.மு.தி.க, த.மா.கா மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்தும், தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் நேற்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.  தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் அ.தி.மு.க தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தே.மு.தி.க பிடிகொடுக்காமல் விலகிச் செல்கிறது.

நேற்று முன்தினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த 2016 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 5.32 சதவீத வாக்குகளைப் பெற்ற பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம். 2016-ல் 2.84 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 20தொகுதிகள் தருகிறோம் என்று அ.தி.மு.க தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

40-க்கும் அதிகமான தொகுதிகளின் பட்டியலை அளித்து இதில் தொகுதிகளை ஒதுக்குமாறு பா.ஜ.க. கோரியுள்ளது. இதில் 90 சதவீத தொகுதிகள் அ.தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் ஆகும் 

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறியதாவது:-

அ.தி.மு.க. தலைமையுடன் நேற்று தான் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளோம். இதில் எந்த ஒரு இழுபறியும் கிடையாது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து ஓரிரு நாட்களில் முறையாக அறிவிப்போம். சட்டசபையில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருப்பார்கள் என கூறினார்.

இதற்கிடையே, சென்னை  நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க-பா.ஜ.க. தலைவர்களிடையே நேற்று இரவு அடுத்தச் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம் ஆகியோரும் அ.தி.மு.க தரப்பில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை இன்றும் தெடர்ந்து நடைபெறுகிறது.

Next Story