சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை மறுதினம் அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல் - தலைமை கழகம் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 March 2021 6:32 AM GMT (Updated: 2021-03-02T12:06:17+05:30)

சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெற உள்ளது.

சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யும் பணிகளில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்பட கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது

இந்நிலையில் அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

இதன்படி மார்ச் 4ம் தேதி காலை 9 மணி முதல் மாவட்ட வாரியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். 

முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை அளிக்க மார்ச் 5ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 3ம் தேதி கடைசி நாள் என அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story