அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகருக்கு கட்சியில் சேர்ந்த உடனே துணை தலைவர் பொறுப்பு


அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகருக்கு கட்சியில் சேர்ந்த உடனே துணை தலைவர் பொறுப்பு
x
தினத்தந்தி 4 March 2021 4:08 AM GMT (Updated: 4 March 2021 4:08 AM GMT)

அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகருக்கு கட்சியில் சேர்ந்த உடனே துணை தலைவர் பொறுப்பு கமல்ஹாசன் வழங்கினார்.

சென்னை, 

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ். அப்துல் கலாமின் மறைவுக்கு பின்னர் இவர் அப்துல் கலாம் லட்சிய இந்தியா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். சட்டசபை தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம், நேர்காணல் நடத்தி தேர்வு செய்யும் குழுவிலும் பொன்ராஜ் இடம் பெற்றிருந்தார்.

இந்தநிலையில் சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் பொன்ராஜ் அக்கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த உடனேயே அவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து பொன்ராஜ் பேசும்போது, ‘‘அப்துல் கலாமின் அறிவார்ந்த அரசியல் இப்போது காலத்தின் கட்டாயம் ஆகும். தமிழகத்தை சீரமைக்க கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருக்கிறார். என்னுடைய கணிப்பின்படி இந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 121 இடங்களில் வெற்றி பெறும். ரஜினிகாந்த் உடன் கடந்த 3 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றினேன். அவருடைய உடல்நிலையை கருத்தில்கொண்டு அரசியலுக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கமல்ஹாசன் விடுத்த அழைப்பை ஏற்று, அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் அவருடன் இணைந்து செயல்பட மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருக்கிறேன். நான் தொடங்கிய கட்சியை கூட மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு பதிவு செய்ய விடாமல் தடுத்தது’’ என்றார்.

Next Story