தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்: கோவில்பட்டியில் ராதிகா போட்டி சரத்குமார் அறிவிப்பு


தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்: கோவில்பட்டியில் ராதிகா போட்டி சரத்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 March 2021 4:13 AM GMT (Updated: 4 March 2021 4:13 AM GMT)

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ராதிகா போட்டியிடுவார் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் அறிவித்தார்.

தூத்துக்குடி, 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 6-வது மாநில பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி திரவியபுரத்தில் நேற்று நடந்தது. கட்சி நிறுவனர் தலைவரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலை சந்திக்க போகும் நேரத்தில் இந்த பொதுக்குழு நடக்கிறது. கட்சியில் 13 ஆண்டுகள் கடுமையாக உழைத்து உள்ளோம். வெற்றியை பார்த்து உள்ளோம். தோல்வியையும் சந்தித்து உள்ளோம். நமக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும். ஒன்றிரண்டு தொகுதிகள் கொடுத்தால் போட்டியிட மாட்டோம். தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கூறி விட்டோம். அதன்பிறகு அவர்களிடம் இருந்து நமக்கு அழைப்பு வரவில்லை. இதனால் அவர்கள் நம்மை மதிக்கவில்லை. நம்மை கறிவேப்பிலை போன்று பயன்படுத்துகிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். எது நடந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம்.

பின்வாங்க மாட்டோம்

எந்த காரணத்துக்காகவும், எள்ளி நகையாடினாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். இனி பின்வாங்குவதே கிடையாது. நம் உழைப்பை எல்லாம் மற்றொரு கட்சிக்கு கொடுத்து விட்டோம். நாம் 10 ஆண்டுகள் ஒரு கட்சிக்காக உழைத்து விட்டோம். ஒரு மனிதனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கேட்கிறோம். அந்த மரியாதை துளிகூட இல்லாத இடமாக இந்த ஆட்சியாளர்களை பார்க்கிறேன். தி.மு.க.வை விட்டு விலகியபோது, கருணாநிதி வெளியேற வேண்டாம் என்றார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னை மீண்டும் அழைத்து, திருச்செந்தூர் தொகுதியை தந்தார். அங்கு சதிவேலைகளால் தோற்கடிக்கப்பட்டேன். ஆனால், மக்கள் மனதில் வெற்றி பெற்று உள்ளேன்.

மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் மக்களுக்காக உழைக்க நல்ல கூட்டணியை உருவாக்க முடிவு செய்து, ஐ.ஜே.கே.தலைவர் ரவிபச்சமுத்து உடன் கூட்டணி அமைத்தோம். இந்த சூழ்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினோம். முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. இந்த கூட்டணி பிரதான கூட்டணி. மக்களுக்காக சேவை செய்யும் அப்பழுக்கற்ற கூட்டணி.

கூட்டணியில் சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும். நாம் வெற்றி பெற சிறந்த வியூகத்தை உருவாக்க வேண்டும். இதனால் கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேசி வந்தோம். அதன் காரணமாக நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு 11.55 மணிக்கு கமல்ஹாசன் அலுவலகத்தில் இருந்து கொள்கை ரீதியாக இணைகிறோம் என்று தகவல் தெரிவித்து உள்ளனர். அப்படி என்றால் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறீர்கள். கமல்ஹாசன் தான் முதல்-அமைச்சர் வேட்பாளர். ஏன் தலைவர் விட்டுக் கொடுத்து விட்டார் என்று கேட்பீர்கள். விட்டுக் கொடுத்தால்தான் வெற்றி வந்து சேரும். இன்னும் பல கட்சிகளுடன் கமல்ஹாசன் பேசிக் கொண்டு இருக்கிறார். இரண்டு, மூன்று நாட்களில் பேச்சுவார்த்தை வலுப்பெற்று சிறந்த கூட்டணி, மக்களுக்கான கூட்டணி உருவாகும்.

ராதிகா போட்டி

நான் மக்கள் காலில் விழத்தயார். பணத்தை வாங்கி கொண்டு மட்டும் ஓட்டு போடாதீர்கள். தமிழகத்தில் சுயநலத்துக்காக இடஒதுக்கீடு கொடுக்கிறார்கள். சமத்துவமாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும். தமிழகத்தில் தற்போது பாதிபேர் மந்திரியாக இருப்பதற்கு காரணம் சரத்குமார்தான். தற்போது எனது முகம் அவர்களுக்கு தெரியவில்லை. இனிமேல் தெரியும்.

நாம் அமைக்கும் கூட்டணி சிறப்பாக அமையும். கமல்ஹாசன் எண்ணத்தையும் அறிந்து, எங்கே நாம் பின்வாங்க வேண்டுமோ, அங்கு பின்வாங்கி கொள்வோம். மற்ற இடத்தில் வியூகத்தை அமைத்து வெற்றி பெறுவோம்.

ராதாபுரத்தில் லாரன்ஸ், கோவில்பட்டியில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள். நான் ஆலங்குளம் அல்லது தென்காசியில் நிற்கலாம்.

தமிழகத்தில் ஒரு மாற்றம் நிச்சயமாக வேண்டும். அறிவு, ஆற்றல், திறமை கொண்டவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். தேர்தலில் வியூகம் வகுத்து உழைத்தால், ஆட்சியில் இந்த கூட்டணி அமரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலக்கு வெற்றிதான்

கூட்டத்தில் மாநில முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் பேசும் போது, ‘சமத்துவ மக்கள் கட்சியின் செயல்பாடுகளும், திட்டங்களும் தொலைநோக்கு பார்வை கொண்டது. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் வந்து உள்ளோம். கட்சியின் வளர்ச்சியை லட்சியமாக கொண்டு உழைப்பேன். தலைவர் கட்டளையிட்டால் கண்டிப்பாக இந்த தேர்தலில் போட்டியிடுவேன். எங்கள் இலக்கு வெற்றிதான்' என்றார்.

Next Story