‘சமத்துவ மக்கள் கட்சியுடன் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை’ கமல்ஹாசன் பேட்டி


‘சமத்துவ மக்கள் கட்சியுடன் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை’ கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2021 5:11 AM GMT (Updated: 4 March 2021 5:11 AM GMT)

சமத்துவ மக்கள் கட்சியுடன் இன்னும் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சட்டசபை தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒவ்வொரு துறை வாரியாக செயல் திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்தவகையில், பெண்கள் நல்வாழ்வு, விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் ஆகிய 3 பிரிவுகளில் தலா 7 செயல் திட்டங்களை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் நேற்று அறிவித்தார்.

அதில், சீருடை பணியில் பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் தூங்குவதற்கென்று அவசரகால இலவச விடுதிகள் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படும். பெண்களுக்கு மாவட்ட அளவிலான மகளிர் வங்கி உருவாக்கப்படும். பஞ்சாயத்து ஒன்றியங்களில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம் நிறுவப்படும். மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமையும்போது 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும். இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தொகுதி பங்கீடு

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மக்கள் நீதி மய்யம் எத்தனை தொகுதியில் போட்டியிட போகிறது? கூட்டணி அமைத்து அந்த கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு எவ்வளவு கொடுக்க போகிறது?

பதில்:- கூட்டணி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்களோடு உட்கார்ந்து பேசி எத்தனை தொகுதிகள் என்பதை முதலில் முடிவு செய்து, அதன்பின்னர் முடிவெடுக்கப்படும்.

கேள்வி:- கூட்டணி என்று சொல்கிறீர்கள், வேளச்சேரி தொகுதியில் சரத்குமார் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்து இருக்கிறார்களே?

பதில்:- அரசியலில் இது நடப்பது தான். ஆர்வத்தின் காரணமாக செய்யப்படுவது. மற்றபடி ஒருங்கிணைக்கப்பட்டு, விவாதத்துக்க பிறகு சீரிய முறையில் அறிவிப்போம்.

விருப்பமனு

கேள்வி:- 234 தொகுதிகளில் போட்டியிட மக்கள் நீதி மய்யத்தில் எவ்வளவு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன?

பதில்:- இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தாக்கல் செய்து வருகின்றனர்.

கேள்வி:- உங்கள் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் வரப்போகிறது?

பதில்: எங்கள் கூட்டணிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். முழுவதுமாக அவை நிரம்பிய பிறகு, பெயரை நிர்ணயம் செய்வோம்.

கூட்டணி உறுதி செய்யவில்லை

கேள்வி:- சமத்துவ மக்கள் கட்சி (ச.ம.க.), இந்திய ஜனநாயக கட்சியுடன் (ஐ.ஜே.கே.) உங்கள் கூட்டணி உறுதியாகிவிட்டதா?

பதில்:- இல்லை. இன்னும் நிறைய பேச்சுவார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் கைகுலுக்கிவிட்டோம் என்பது உண்மை.

கேள்வி:- தேசிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து ஏதாவது பேசினீர்களா? அல்லது அவர்கள் எதுவும் உங்களிடம் பேசினார்களா?

பதில்:- எனக்கு நல்லவர்களுடன் கூட்டணி வைக்க விருப்பம். மாற்றத்துக்கு யாராவது உதவுவார்களோ? அவர்களுடனும் கூட்டமைப்பு வைக்கவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதனையும் ஜாக்கிரதையாக செய்வோம்.

கேள்வி:- எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் செய்வதாக அறிவித்திருந்தீர்கள். அதில் மாற்றம் செய்தது ஏன்? யாராவது அழுத்தம் தந்தார்களா?

பதில்:- அனுமதி தான் பிரச்சினை. எங்களுக்கு அது கிடைத்துவிடக்கூடாது என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கிறது. இந்த ஆர்வம் அதிகாரத்துக்கு தான் இருக்கும். அதிகாரம் யார் கையில் இருக்கிறது?.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Next Story