அ.தி.மு.க.வுடன், த.மா.கா. நிர்வாகிகள் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜான்பாண்டியனும் சந்தித்து பேசினார்


அ.தி.மு.க.வுடன், த.மா.கா. நிர்வாகிகள் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜான்பாண்டியனும் சந்தித்து பேசினார்
x
தினத்தந்தி 5 March 2021 2:17 AM GMT (Updated: 2021-03-05T07:47:54+05:30)

அ.தி.மு.க.வுடன், த.மா.கா. நிர்வாகிகள் 2-ம் கட்டமாக நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதேவேளை ஜான்பாண்டியனும், அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

சென்னை, 

சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க., தே.மு.தி.க. உடனான தொகுதி பங்கீடு உறுதியாகாமல் இழுபறியே நீடிக்கிறது.

இந்தநிலையில் அ.தி.மு.க.- த.மா.கா. இடையே தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கட்சி தலைமையிடம் பேசி முடிவு சொல்வதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அப்போது தெரிவித்திருந்தார்.

2-ம் கட்டமாக நடந்தது

இந்தநிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணியை த.மா.கா. துணைத்தலைவர் என்.கோவைத்தங்கம், செயற்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

அப்போது 12 தொகுதிகள் வேண்டும் என்ற தங்களது நிலைப்பாட்டை மீண்டும் கோரிக்கையாக விடுத்ததாகவும், த.மா.கா. விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் அ.தி.மு.க நிர்வாகிகளிடம், த.மா.கா. நிர்வாகிகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது குறிப்பிடத்தக்கது.

ஜான்பாண்டியன்

அதனைத்தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் ஜான்பாண்டியன், தனது மனைவி பிரிசில்லா பாண்டியனுடன் வந்தார். அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து ஜான்பாண்டியன் கூறுகையில், “சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 5 இடங்கள் கேட்டிருக்கிறோம். கட்சி தலைமையுடன் பேசி 2 நாட்களில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது'' என்று கூறினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story