வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வசதி தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வசதி தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 5 March 2021 8:44 AM IST (Updated: 5 March 2021 8:44 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகள் ஓட்டு போடுவதற்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை, 

இதுகுறித்து சென்னை தலைமைச ்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கண்காணிக்க இந்திய தேர்தல் கமிஷன் 4 சிறப்பு பார்வையாளர்களை அனுப்பி வைக்க உள்ளது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மதுமகாஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் செலவினங்கள் பார்வையாளர்களாகவும், பொது பார்வையாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலோக் வரதன், காவல் துறை பார்வையாளராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தர்மேந்திரகுமார் ஆகியோர் விரைவில் தமிழகம் வந்து அவர்களுடைய பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல் தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் 60 பேர் பிற மாநிலங்களுக்கு சிறப்பு பார்வையாளர்களாக செல்ல உள்ளனர்.

ரூ.10.35 கோடி பறிமுதல்

ஓட்டு போடுவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெறப்பட்டு நூறு சதவீதம் தயார் நிலையில் உள்ளன. வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டு போட முடியும். ஆனால் இந்த முறை கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்குவது குறித்தும், தேர்தல் நடத்தும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேமாதிரியான நேரத்தை ஒதுக்குவது குறித்தும் இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.

வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது ரூ.11 கோடி மதிப்பில் ரொக்கம், குக்கர், புடவை போன்ற பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் ரொக்கம் ரூ.10.35 கோடியாகும்.

முக கவசம் அணியாவிட்டால் ஓட்டு போட முடியாது

கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடுமையாக கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள், போலீசாருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடவும் சுகாதாரத்துறை முனைப்பு காட்டிவருகிறது.

ஓட்டு போட வரும் வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் 11 வகையான ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பித்து ஓட்டு போடலாம். ஆனால் கொரோனா விதிமுறைகளான சமூக இடைவெளி, முக கவசம் அணிவது உள்ளிட்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளதால் முக கவசம் இல்லாமல் வாக்குச்சாவடிக்கு வந்தால் ஓட்டு போட அனுமதி இல்லை.

தபால் ஓட்டுகள்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் தேர்தல் கமிஷன் மூலம் வழங்கப்படும் பிபிஇ கிட் அணிந்து சென்று வாக்குப்பதிவு முடிவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக சென்று வாக்களிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால் வாக்கு எண்ணிக்கை மையங்களும் கூடுதலாக ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. தபால் ஓட்டுகளை பொறுத்தமட்டில் அரசு அதிகாரிகளில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகள் கையெழுத்திட்டு வாக்கு செலுத்தலாம். தபால் ஓட்டு போட விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் பட்டியலை தேர்தல் கமிஷன் அளிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் வாக்காளர் பட்டியல் வழங்கும் போது அதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தபால் ஓட்டுகள் ஓட்டு சீட்டு முறையில் இருக்கும். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் பெயர் அருகில் சரி (டிக்) என்று போட வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு மாவட்ட வாரியாக பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக சேர்ந்துள்ள வாக்காளர்களுக்கு வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடத்தப்படும் முகாம்களில் சென்று அவரவர் பதிவு செய்துள்ள செல்போன்களில் அவர்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது voterportal.eci.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து புதிய வாக்காளர்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த ஆவணத்தை எடுத்து சென்று வாக்களிக்கலாம். 21 லட்சம் புதிய வாக்காளர்களில் 4 லட்சம் பேருக்கு வீட்டு முகவரிக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story