இன்றுடன் நேர்காணல் நிறைவு; தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 10-ந்தேதி வெளியாகும்


இன்றுடன் நேர்காணல் நிறைவு; தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 10-ந்தேதி வெளியாகும்
x
தினத்தந்தி 6 March 2021 5:29 AM IST (Updated: 6 March 2021 5:29 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது. வேட்பாளர்கள் பட்டியல் 10-ந்தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

14-ந்தேதி முதல் பிரசாரம்

தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை தி.மு.க. கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்தார். ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்று மக்கள் கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளும் மாவட்ட வாரியாக பிரசாரத்தை முன்னெடுத்தனர். கடந்த ஜனவரி 29-ந்தேதி முதல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெறும் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். இந்த மக்கள் சந்திப்பின்போது, ‘தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்படும்’ என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதியை அளித்து வருகிறார். இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் வருகிற 12-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பின்னர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தனது சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை வருகிற 14-ந்தேதி தொடங்க உள்ளார்.

திருச்சியில் பொதுக்கூட்டம்

இந்தநிலையில் தி.மு.க. சார்பில் திருச்சியில் மாநாடு போன்று ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் 7-ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி பேசுகிறார். அப்போது அவர், தமிழகம் அனைத்து துறைகளிலும் அடுத்த 10 ஆண்டுகளில் முதலிடம் பிடிப்பதற்கான தன்னுடைய தொலைநோக்கு திட்டம் குறித்த லட்சிய பிரகடன அறிக்கையை வெளியிட இருக்கிறார்.

இதுபற்றி, கடந்த 1-ந்தேதி தனது பிறந்தநாளன்று மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை

திருச்சி பொதுக்கூட்டம் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று காலை ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்துவிடும். அதன்பின்னர் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு 10-ந்தேதி வெளியிடப்படும். திருச்சியில் 7-ந்தேதி நடைபெறும் பொதுகூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களை அழைத்து வர வேண்டும்.

இந்த கூட்டத்தில், நான் வெளியிட போகும் லட்சிய பிரகடன தொலைநோக்கு பார்வை அறிக்கை, அடுத்த 20 நாட்களில் 2 கோடி குடும்பங்களிடம் சென்றடைய வேண்டும். எனவே இதனை துண்டுபிரசுரமாக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைகள், வார்டுகள், கிராமங்கள் அளவில் பட்டிதொட்டிகள் தோறும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்’ என்று கூறியதாக தெரிகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை 11-ந்தேதி வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதற்கிடையே அ.தி.மு.க.வில் 6 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியான நிலையில், தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 10-ந்தேதி வெளியாக உள்ளதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

வேட்பாளர்கள் நேர்காணல்

தற்போது தி.மு.க.வில் வேட்பாளர்கள் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கி, காலை-மாலை என இருவேளைகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நேற்று 4-வது நாளாக நேர்காணல் நடைபெற்றது. இதில், காலையில் தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும், மாலையில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) மாலை நேர்காணல் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவசர அழைப்பு மூலம் நேற்று அந்த இடங்களுக்கு நேர்காணல் நடந்து முடிந்தது. இந்தநிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசிநாளான இன்று திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ளடங்கிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.


Next Story