கமல்ஹாசன் அமைக்கும் 3-வது அணிக்கு ம.தி.மு.க. செல்லுமா? வைகோ பதில்


கமல்ஹாசன் அமைக்கும் 3-வது அணிக்கு ம.தி.மு.க. செல்லுமா? வைகோ பதில்
x
தினத்தந்தி 6 March 2021 12:07 AM GMT (Updated: 6 March 2021 12:07 AM GMT)

கமல்ஹாசன் அமைக்கும் 3-வது அணிக்கு ம.தி.மு.க. செல்லுமா? என்பது குறித்து வைகோ பதிலளித்தார்.

பேச்சுவார்த்தை இழுபறி

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக இருந்து வருகிறது. தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை என்று ம.தி.மு.க. குழுவினர் வெளிப்படையாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது குறித்து ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்றும் வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அழைப்பு வரவில்லை

அப்போது வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க. நம்பிக்கையோடு ஈடுபட்டு இருக்கிறது. எனினும் 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இன்னும் தி.மு.க.விடம் இருந்து அழைப்பு வரவில்லை. தொகுதி பங்கீட்டில் நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்கிறோம், அவர்கள் எத்தனை தருவதாக சொல்கிறார்கள் என்ற விவரங்களையெல்லாம் தற்போது வெளியே சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கமல்ஹாசன் கருத்து

பேட்டியின்போது வைகோவிடம், ‘கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதையை தி.மு.க. தரவில்லை என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டும் ஒதுக்கியது சமூகநீதிக்கு எதிரானது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை. தி.மு.க. மரியாதையாகத்தான் நடத்துகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கியது குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்து தவறானது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை கவுரமாகத்தான் தி.மு.க. நடத்தி இருக்கிறது’ என்று பதிலளித்தார்.

கமல்ஹாசன் அமைக்கும் 3-வது அணிக்கு ம.தி.மு.க. செல்லுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘வாய்ப்பே கிடையாது’ என்று வைகோ திட்டவட்டமாக கூறினார்.

இன்று தொகுதி உடன்பாடு?

சென்னையில் ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில், கூட்டணியில் தி.மு.க. ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பதென முடிவெடுக்கப்படும் என்றும், அதனடிப்படையில் தி.மு.க.-ம.தி.மு.க. இடையே இன்று தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Next Story