அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்


அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்
x
தினத்தந்தி 6 March 2021 6:07 AM IST (Updated: 6 March 2021 6:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜ.க.வே போட்டியிடுகிறது.

பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் எல். முருகன் ஆகியோர் கையழுத்திட்ட 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் உடன்படிக்கையில் கூறியிருப்பதாவது:-

6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க.-பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டில் தேர்தலை சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜ.க இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் உடன்படிக்கை நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி
அதேபோல், 6-ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அந்த தேர்தல் உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story