வேளாண் விளைபொருட்கள் அரசால் கொள்முதல்: தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம்; பா.ம.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு


வேளாண் விளைபொருட்கள் அரசால் கொள்முதல்: தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம்; பா.ம.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 March 2021 7:40 AM IST (Updated: 6 March 2021 7:40 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் விளைபொருட்கள் அரசால் கொள்முதல் செய்யப்படும் என்றும், தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம் வழங்கப்படும் என்றும் பா.ம.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க. தேர்தல் அறிக்கை

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இணையவழியில் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இணையவழியில் முன்னிலை வகித்தார்.

மேலும், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 135 பக்கங்களில், 48 தலைப்புகளில் பா.ம.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-

அனைவருக்கும் இலவச கல்வி

* மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும். 2021-22-ம் ஆண்டு முதல், 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை கொண்டுவரப்படும்.

* உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடன் தொகையை தமிழக அரசே வங்கிகளுக்கு செலுத்தும்.

* மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப்பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடித்து நல்ல தீர்ப்பைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

* மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்று, அண்ணா பல்கலைக்கழகத்திலும், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யப்படும்.

வேளாண் விளைபொருட்கள் கொள்முதல்

* தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகள் இல்லாத காஞ்சீபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அனைத்து வேளாண் விளைபொருட்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும். வேளாண் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2,500 குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.

2-வது தலைநகரம் திருச்சி

* காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு, ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்காகவும், இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். நிர்வாக வசதிக்காக 2-வது தலைநகரமாக திருச்சியும், 3-வது தலைநகரமாக மதுரையும் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் தொழில் தலைநகரமாக கோவை அறிவிக்கப்படும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு

* தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். லோக் ஆயுக்தா அமைப்பு வலிமையானதாக மாற்றப்படும். தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தவுடன் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வெற்றிபெறும்.

* தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு சிப்காட் தொழில் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது. பத்திரிகை துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற நலிந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போலீஸ்துறைக்கு முழுச்சுதந்திரம் அளிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கையில் கூட்டணி கட்சிகளின் சின்னங்கள்

பா.ம.க. தேர்தல் அறிக்கை புத்தகத்தின் பின்புற அட்டைப் படத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் என்று குறிப்பிட்டு, பா.ம.க.வின் மாம்பழ சின்னம், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம், பா.ஜ.க.வின் தாமரை சின்னம் இடம்பெற்று இருந்தன.

பொதுவாக தே.மு.தி.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்தபிறகுதான் கூட்டணியை உறுதிசெய்து வருகிறது. அந்தவகையில் தற்போதும் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்ட பின்னரே கூட்டணி உறுதியாகும் என்ற நிலை நீடிப்பதால், பா.ம.க. தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தே.மு.தி.க.வின் சின்னத்தை இடம்பெற செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில், கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுடன் இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையவில்லை என்றாலும், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கூட்டணியை ஏற்கனவே உறுதிசெய்துவிட்ட காரணத்தினால் அவர்களுடைய சின்னத்தை தேர்தல் அறிக்கையில் பா.ம.க. இடம்பெற செய்துள்ளது.


Next Story