தொகுதி கண்ணோட்டம்: மயிலாடுதுறை


தொகுதி கண்ணோட்டம்: மயிலாடுதுறை
x
தினத்தந்தி 6 March 2021 10:50 AM IST (Updated: 6 March 2021 10:50 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டது.

அதன்படி நாகை மாவட்டத்தில் இருந்த 6 சட்டசபை தொகுதிகளில் 3 தொகுதிகளான மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இதில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதி 161-வது இடத்தை பிடித்துள்ளது.

தொகுதி மறு சீரமைப்பில் நீக்கப்பட்ட தொகுதியான குத்தாலம் ஒன்றியத்தில் இருந்து 6 ஊராட்சிகளும், குத்தாலம் பேரூராட்சியும் மயிலாடுதுறை தொகுதியில் இணைக்கப்பட்டது. மேலும் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளும், மயிலாடுதுறை பேரூராட்சியும் இந்த தொகுதியில் உள்ளது. இது பொதுத்தொகுதியாகும்.மயிலாடுதுறை தொகுதி 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு வரை மயிலாடுதுறை தொகுதி 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், த.மா.கா. பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகியவை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.அதாவது 1952, 1957, 1962, 1991, 2006-ல் காங்கிரசும், 1967, 1971, 1977, 1980, 1984(இடைத்தேர்தல்), 1989-ல் தி.மு.க.வும், 1984, 2016-ல் அ.தி.மு.க.வும், 1996-ல் த.மா.கா., 2001-ல் பா.ஜ.க., 2011-ல் தே.மு.தி.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 70 ஆயிரத்து 949 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குத்தாலம் அன்பழகன் 66 ஆயிரத்து 171 வாக்குகள் பெற்றார்.மயிலாடுதுறையில் 18 சித்தர்களுள் ஒருவரான குதம்பை சித்தர் சமாதியான மயூரநாதர்கோவில், 108 திவ்யதேசங்களில் 22-வது திவ்யதேசமான பரிமளரெங்கநாதர் கோவில் ஆகியவை உள்ளன. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கரம் விழா கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. இதில் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்று காவிரியில் நீராடினர்.

இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதி திராவிடர்கள், பிள்ளைமார், நாயுடு, செட்டியார், முஸ்லிம்கள் என பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த தொகுதியின் முக்கிய தொழில் விவசாயமாக உள்ளது. நெல், கரும்பு, தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.மயிலாடுதுறை தொகுதியில் குமாரமங்கலம்-கடலூர் மாவட்டம் ஆதனூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 5 அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. மணல்மேட்டில் புதிதாக தீயணைப்பு நிலையம், பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் மக்கள் எதிர்பார்த்த சில முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. மயிலாடுதுறை நகர மக்களின் நீண்ட நாள் 

கோரிக்கையான ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் தற்போது வரை கொண்டுவரப்படவில்லை. மயிலாடுதுறை நகரை சுற்றி புறவழிச்சாலை திட்டமும் கிடப்பில் உள்ளது. கடலூர்-மயிலாடுதுறை மாவட்டத்தை இணைக்கும் வகையில் மணல்மேடு-முட்டம் இடையே பாலம் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை மணல்மேடு பகுதியில் அந்த பாலத்திற்கான அணுகுசாலை அமைக்கப்படவில்லை. நலிவடைந்த நிலையில் இருந்த என்.பி.கே.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டு விட்டது. அந்த ஆலை மீண்டும் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதை திறக்க 
வேண்டும் போன்றவை இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2016-ம் ஆண்டு மயிலாடுதுறை தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 139 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்து வந்தவர்கள் என 12 ஆயிரத்து 83 பேர் அதிகரித்துள்ளனர். எனவே இவர்களது வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் -2,45,222

ஆண்கள் -1,21,166

பெண்கள் -1,23,841

மூன்றாம் பாலினம் -15

Next Story