கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி? 23 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளோம் - தேமுதிக


கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி? 23 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளோம் - தேமுதிக
x
தினத்தந்தி 6 March 2021 4:22 PM GMT (Updated: 6 March 2021 4:22 PM GMT)

அதிமுகவுடனான சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இறங்கி வந்துள்ளதாக தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக-தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.  இதில் அதிமுக சார்பாக வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அக்பர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அதிமுக, தேமுதிக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

"கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஒன்றும் இல்லை. எங்களுக்கிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதிகள் எண்ணிக்கையில் நாங்கள் சற்று இறங்கி வந்துள்ளோம். 40 தொகுதிகள் கேட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் 25 அல்லது அதற்கு மேலான தொகுதிகளாக எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டோம். இன்று 23 தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் இடம் என சற்று இறங்கி வந்துள்ளோம். இதில் மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்க உறுதியளித்துள்ளார்கள்.

இந்த எண்ணிக்கை குறித்து தலைவரிடம் கலந்துரையாட உள்ளோம். அதன்பிறகு, நாளை அல்லது நாளை மறுநாள் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story