தொகுதி கண்ணோட்டம்: துறைமுகம்
சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை கொண்டதாகவும், முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதியாகவும் விளங்குவது துறைமுகம்.
இந்த தொகுதியில்தான் சென்னை துறைமுகம், பாரிமுனை, ஐகோர்ட்டு, அரசு சட்டக்கல்லூரி, தலைமைச்செயலகம், சென்டிரல் ரெயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, சென்னை அரசு மருத்துவ கல்லூரி ஆகியவை வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதிகள் என்று எடுத்துக்கொண்டால், வார்டுகள் 54, 55, 56, 57, 59, 60 ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த தொகுதியில், மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி 2 முறையும், மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் 3 முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
எனவே, ஆரம்பம் முதலே துறைமுகம் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. 1977, 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் தி.மு.க. வேட்பாளர் ஏ.செல்வராஜன் ‘‘ஹாட்ரிக்’’ வெற்றி பெற்றார். 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் கருணாநிதி தொடர் வெற்றி பெற்றார். அதன்பிறகு, 1996, 2001, 2006-ம் ஆண்டுகளில், க.அன்பழகன் ‘‘ஹாட்ரிக்’’ வெற்றியை பதிவு செய்து, துறைமுகம் தொகுதி தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஆனால், 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிலைமை மாறியது. 34 ஆண்டுகால தி.மு.க.வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கிய பழ.கருப்பையா, 20,317 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அல்தாப் உசேனை (தமிழ் மாநில தேசிய லீக்) தோற்கடித்தார். அதாவது, பழ.கருப்பையா 53,920 வாக்குகளும், அல்தாப் உசேன் 33,603 வாக்குகளும் பெற்றனர்.இந்த நிலையில் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் விழா ஒன்றில் பங்கேற்று பேசும்போது, அ.தி.மு.க. அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்தார். இதனால், அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. தலைமை அவரை கட்சியை விட்டு நீக்கியது. அவரும் மறுநாளே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, தேர்தலுக்கு 3 மாத
இடைவெளியே இருந்ததால், அதுவரை காலியானதாகவே துறைமுகம் தொகுதி இருந்தது.
பிறகு, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. சார்பில் பி.கே.சேகர்பாபுவும், அ.தி.மு.க. தரப்பில் கே.எஸ்.சீனிவாசனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டனர். தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்
பி.கே.சேகர்பாபு 4,836 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை தவிர ஏனைய 23 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்
மொத்த வாக்காளர்கள் 1,88,171
பதிவான வாக்குகள் 1,04,313
பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) 42,071
கே.எஸ்.சீனிவாசன் (அ.தி.மு.க). 37,235
துறைமுகம் தொகுதியில் சிறுபான்மையின முஸ்லிம் மக்கள் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தங்கியிருக்கும் கூலித்தொழிலாளர்களும் அதிகம் பேர் இந்த தொகுதியில் உள்ளனர். மேலும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களும் கணிசமாக இருக்கின்றனர்.
தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, தள்ளுவண்டி, மீன்பாடி வண்டி போன்றவை இந்த தொகுதியில் அதிகம் காணப்படுகின்றன. இதனால், பிரதான சாலைகளை தவிர்த்து ஏனைய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது எப்போதும் இருக்கின்றது. குப்பை கழிவுகளும் முறையாக அகற்றப்படுவதில்லை என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் எதிரொலிக்கிறது. பாரிமுனையில் பிரபலமான பகுதியாக விளங்கும் பர்மா பஜாரில், சிறிது சிறிதாக 300 கடைகள் இருக்கின்றன. ஆனால், இந்த கடைகளில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு கழிப்பிட வசதி சரிவர இல்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.
துறைமுகம் தொகுதியில் மிகப்பெரிய பிரச்சினையாக, நிலக்கரி துகள் விளங்கியது. அதாவது, சென்னை துறைமுகத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் கொண்டுவரப்பட்டு நிலக்கரி இறக்கப்பட்டதால் காற்று மாசு ஏற்பட்டது. தற்போது, நிலக்கரி இறக்கப்படுவது எண்ணூர் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. இது ஒன்றுதான் அந்த தொகுதி மக்களுக்கு கிடைத்த பெரிய விமோச்சனம். மற்றபடி, பெரிய அளவிலான வளர்ச்சி தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில், 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள், இடம் பெயர்ந்து வந்தவர்கள் என வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால், கடந்த தேர்தலில் இருந்த எண்ணிக்கையைவிட இந்த தொகுதியில் 6,548 வாக்காளர்கள் குறைந்திருக்கிறார்கள். போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள் நீக்கப்பட்டது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
எது எப்படி என்றாலும், துறைமுகம் தொகுதியை பொறுத்தவரை தி.மு.க.வின் கையே சற்று ஓங்கியிருக்கிறது.
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் - 1,76,272
ஆண்கள் - 91,936
பெண்கள் - 84,281
மூன்றாம் பாலினத்தவர்கள் - 55
Related Tags :
Next Story