தொகுதி கண்ணோட்டம்: காரைக்குடி


தொகுதி கண்ணோட்டம்: காரைக்குடி
x
தினத்தந்தி 7 March 2021 11:32 AM IST (Updated: 7 March 2021 11:32 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியை செட்டி நாடு என்றும், கல்வி நகரம் என்றும் சிறப்புற்று அழைக்கிறார்கள். இந்த நகரில் கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. கல்விக்காகவும், இருப்பிட வசதிக்காகவும் இங்கு ஏராளமானோர் குடியேறி உள்ளனர்.

தமிழ்த்தாய்க்கு தனிக்கோவில்
உலகில் மொழிக்கென ஒரு கோவில் முதலில் உருவாக்கப்பட்டது என்றால் அது காரைக்குடியில் தான். இங்கு கம்பன் மணிமண்டபத்தில் தமிழ்தாய்க்கென தனிக்கோவில் உள்ளது. திருக்குறள் கழகம், கம்பன் கழகம், அண்ணா தமிழ் கழகம், கலைஞர் பாசறை, பாரதிதாசன் பேரவை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தமிழ்சார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சுதந்திர போராட்ட வரலாற்றிலும். காரைக்குடிக்கு சிறப்பிடம் உண்டு. காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இதுதவிர பட்டு, கைத்தறி நெசவு, அரிசி ஆலைகள் ஏராளம் உண்டு. ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வரும் பிரதான கைத்தொழிலாக ‘செட்டிநாடு ஸ்நாக்ஸ்’ எனப்படும் திண்பண்ட வகை தயாரிப்பு பிரசித்தம். இவை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பல்வேறு மொழிகளில் சினிமா சூட்டிங் தொழில் இங்கு நடைபெற்று வருகிறது. அவற்றால் நேரடி மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் திரையுலக 
பிரமுகர்கள் பலரின் சொந்த ஊர் காரைக்குடி தொகுதியில் அமைந்துள்ளது.

வெற்றி பெற்றவர்கள்
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 1952-ல் சொக்கலிங்கம் செட்டியார்(காங்), 1957-ல் ராஜா சர் முத்தையா செட்டியார்(காங்), 1962 -ல் சா. கணேசன்(சுதந்திரா கட்சி சீர்திருத்த காங்கிரஸ் கூட்டணி), 1967-ல் வக்கீல் மெய்யப்ப செட்டியார்(சுதந்திரா கட்சி), 1971-ல் சித. சிதம்பரம்(தி.மு.க.) 1977-ல் பொ.காளியப்பன்(அ.தி.மு.க.), 1980-ல் சித.சிதம்பரம் (தி.மு.க.), 1984-ல் சு.ப. துரைராஜ் (அ.தி.மு.க.) 1989-ல் ராம நாராயணன்(தி.மு.க.), 1991-ல் கற்பகம் இளங்கோ(அ.தி.மு.க.), 1996-ல் என். சுந்தரம்(த.மா.கா), 2001-ல் எச்.ராஜா(பா.ஜனதா), 2006-ல் என்.சுந்தரம்(காங்), 2011-ல் சோழன் சித. பழனிச்சாமி (அ.தி.மு.க.) 2016-ல் கே.ஆர். ராமசாமி (காங்) ஆகியோர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக பணியாற்றினார்கள். சித.சிதம்பரமும், என்.சுந்தரமும் இருமுறை தேர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்
2016-ம் ஆண்டு காரைக்குடி தொகுதி சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்)-93,419,

கற்பகம் இளங்கோ (அ.தி.மு.க.)- 75,136,

புலவர் செவந்தியப்பன்(ம.தி.மு.க)- 14,279,

பரிமளம் (நாம் தமிழர் கட்சி)-5,344,

வி.ஆர்.வி.முத்துலட்சுமி (பா.ஜ.க.)-4,969

2 நகராட்சிகள்
காரைக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை காரைக்குடி நகராட்சி, தேவகோட்டை நகராட்சி ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன.மேலும் கண்ணங்குடி ஒன்றியம், தேவகோட்டை ஒன்றியம், சாக்கோட்டை ஒன்றியத்தின் பெரும்பகுதி, கல்லல் ஒன்றியத்தில் ஒரு பகுதி, புதுவயல், கண்டனூர் பேரூராட்சி பகுதிகள் உள்ளன.

சட்டக்கல்லூரி, பல்மருத்துவக்கல்லூரி
காரைக்குடி சட்டமன்ற தொகுதி மக்கள் எதிர்பார்ப்பது காரைக்குடி பகுதியில் அரசு சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும்.சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்ட சிப்காட் திட்டத்தை செயல்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும். தேவகோட்டை பகுதியில் அரசு கல்லூரிகளே இல்லை. அங்கு அரசு கலைக்கல்லூரி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றை அமைத்து தரவேண்டும்.

காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தில் காரைக்குடி தொகுதி மக்கள் பயன் பெரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காரைக்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆண்டுக்கு 500 பிரசவங்கள் நடக்கின்றன. ஆனால் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. நவீன உபகரணங்கள் இல்லை. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு அங்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் விபத்து தீவிர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்.

தனி மாவட்டம் அமைக்க வேண்டும்
காரைக்குடி பகுதியில் சப்-கோர்ட்டு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கண்டனூர் பகுதியில் மூடிக்கிடக்கும் கதர் கிராம தொழில் மையத்தை திறந்து அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி காரைக்குடி- மதுரை இடையே அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலை பணியை விரைவு படுத்த வேண்டும். தொகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தி சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும்.

காரைக்குடியை தலைநகராக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என்பவை உள்பட இத்தொகுதி மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் - 3,15,351

ஆண்கள் - 1,54,905

பெண்கள் - 1,60,399

மூன்றாம் பாலினத்தவர்கள் - 47

Next Story