சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உடன் மக்கள் நீதி மய்யம் இன்று தொகுதி பங்கீடு


சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உடன் மக்கள் நீதி மய்யம் இன்று தொகுதி பங்கீடு
x
தினத்தந்தி 8 March 2021 4:35 AM IST (Updated: 8 March 2021 4:35 AM IST)
t-max-icont-min-icon

சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உடன் மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று தொகுதி பங்கீடு செய்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.

சென்னை,

 தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு பெரும் அணிகள் களத்தில் உள்ளன. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியை தங்கள் கூட்டணிக்கு இழுக்க மக்கள் நீதி மய்யம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. மக்கள் நீதி மய்யம் தலைமையிலான இந்த அணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை சேருகின்றன. மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சியின் தலைவர் டாக்டர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 10 முதல் 15 தொகுதிகளை ஒதுக்குவதற்கு மக்கள் நீதி மய்யம் தரப்பில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சியை தங்கள் கூட்டணிக்கு வருமாறும் மக்கள் நீதி மய்யம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தை கமல்ஹாசன், நேற்று எம்.எம்.டி.ஏ. காலனி, திரு.வி.க.நகர் பஸ் நிறுத்தம், பெரம்பூர் முல்லை நகர், புரசைவாக்கம் தாணா தெரு உள்ளிட்ட இடங்களில் திறந்த காரில் சென்றவாறு பிரசாரத்தில் ஈடுபட்டுவிட்டு, நிறைவாக தங்க சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதாக பயண திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்த பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், மாநில செயலாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன், கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன், துணை பொதுச்செயலாளர் ரவிபாபு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாகிரதி ஆகியோர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். 3-வது முறையாக நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்வது தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் நிருபர்களிடம் கூறியதாவது:- சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உடனான இறுதி கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டது. நாளை (இன்று) கமல்ஹாசன், சரத்குமார், ரவி பச்சமுத்து ஆகியோர் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுடனான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்பட்டு எங்கள் கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story