நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம்: பா.ஜனதா கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அமித்ஷா பேட்டி


நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம்: பா.ஜனதா கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அமித்ஷா பேட்டி
x
தினத்தந்தி 7 March 2021 11:47 PM GMT (Updated: 7 March 2021 11:47 PM GMT)

நாகர்கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பா.ஜனதா கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்’ என்றார்.

நாகர்கோவில், 

தமிழகத்தில் முதற்கட்டமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 2-வது கட்டமாக நேற்று அவர் குமரியில் சுசீந்திரம், நாகர்கோவிலில் வாக்குகள் சேகரித்தார்.

இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு வந்திறங்கினார். அங்கிருந்து கார் மூலமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அவருக்கு பா.ஜனதாவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வீடு, வீடாக பிரசாரம்

தொடர்ந்து அவர் தாணுமாலயசாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பிறகு அங்கு ரத வீதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு சென்று மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்குகளை சேகரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜனதா, பா.ம.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். இந்த கூட்டணிக்கு மக்கள் அதிகம் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றி பெற வைத்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும். தமிழகம் வளர்ச்சி பெற பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லிக்கு தேவை. இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது அவருடைய வெற்றி உறுதி என்பது தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்கு சேகரிப்பு

பின்னர் அவர் சுசீந்திரத்தில் இருந்து நாகர்கோவில் வந்து நீலவேணி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபிறகு செட்டிகுளம் சந்திப்புக்கு காரில் வந்தார். அங்கிருந்து பிரசார வாகனத்தில் ஏறி ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்தார்.

அவருடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். இவர்களுடன் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காமராஜர் சிலைக்கு மாலை

பின்னர் காமராஜர் சிலைக்கு அமித்ஷா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவர் அங்கிருந்து வடசேரியில் உள்ள உடுப்பி இன்டர்நேஷனல் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

குமரி மாவட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக குமரி, நெல்லை, விருதுநகர், தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,500 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

பின்னர் வடசேரி உடுப்பி ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவும் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும், 20 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வியூகங்கள் வகுக்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறினார்.

Next Story