புதுச்சேரியில் நிறைவு பெறாத தேர்தல் கூட்டணி பேச்சு - தொடர்ந்து மௌனம் காக்கும் ரங்கசாமி


புதுச்சேரியில் நிறைவு பெறாத தேர்தல் கூட்டணி பேச்சு - தொடர்ந்து மௌனம் காக்கும் ரங்கசாமி
x
தினத்தந்தி 8 March 2021 3:26 AM GMT (Updated: 8 March 2021 3:26 AM GMT)

பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பெரும்பாலோனார் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்பதை வலியுறுத்தி பா.ஜ.க.வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை மனதில் வைத்துக் கொண்டு கூட்டணி பேசுவதில் பிடி கொடுக்காமல் ரங்கசாமி தவிர்த்து வருகிறார். இருந்தாலும் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரான மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் ரங்கசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கூடுதல் தொகுதிகள், முதல்-அமைச்சர் வேட்பாளர் ஆகியவற்றை விட்டுத்தருவதாக பா.ஜ.க. சமரசத்துக்கு வந்தது. ஆனாலும் ரங்கசாமி கூட்டணி முடிவை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறார்.

வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ரங்கசாமியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால்தான் தேர்தலில் எளிதில் வெற்றி பெற முடியும் என்று பா.ஜ.க. கருதுகிறது.

எனவே அந்த கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்த பின்னர் தான் கூட்டணியில் உள்ள பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.

இதனால் ரங்கசாமியின் முடிவுக்காக மற்றவர்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் முடித்து தொகுதி பங்கீடு இறுதி செய்ய பா.ஜ.க. தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இந்தநிலையில் ரங்கசாமி தனித்துப் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதனால் பா.ஜ.க. நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருந்தாலும் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் கடைசி கட்ட முயற்சியாக ரங்க சாமியிடம் பேசி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.  அவரது முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட பா.ஜ.க. தீர்மானித்துள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story