குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1500 - அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 March 2021 2:37 PM GMT (Updated: 8 March 2021 3:34 PM GMT)

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1500 மற்றும் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. 

முன்னதாக நேற்று திருச்சியில் நடைபெற்ற திமுகவின் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து தங்கள் திட்டங்களை காப்பி அடித்து வெளியிட்டுள்ளதாக திமுக மீது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.  

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1500 மற்றும் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மகளிர் தினத்தை ஒட்டி, அதிமுக தேர்தல் வாக்குறுதியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கட்சி தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்து விட்டது. ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். சிறப்பான திட்டங்களால் நாங்கள் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளோம். அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள், மீண்டும் இணைய விரும்பினால் தலைமை முடிவு செய்யும். கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் ஏற்கனவே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மக்கள் மனம் மகிழும் வகையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய திட்டங்களை அதிமுக அரசு தந்துள்ளது. விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்தார். 

Next Story