திருச்சியில் மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 உறுதிமொழிகள்: மத்திய அரசு ஏற்கனவே நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது எல்.முருகன் தகவல்


திருச்சியில் மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 உறுதிமொழிகள்: மத்திய அரசு ஏற்கனவே நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது எல்.முருகன் தகவல்
x
தினத்தந்தி 9 March 2021 12:08 AM GMT (Updated: 9 March 2021 12:08 AM GMT)

திருச்சி தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 உறுதிமொழிகளையும் ஏற்கனவே மத்திய அரசு திட்டங்களாக திறம்பட செயல்படுத்தி வருகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

சென்னை, 

திருச்சியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் 7 உறுதிமொழிகளை அறிவித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனை செயல்படுத்துவோம் என்று கூறி உள்ளார். ஆனால் இந்த ஏழு உறுதிமொழிகளையும் ஏற்கனவே மத்திய அரசு தமிழகம் உள்பட நாடு முமுழுவதும் சிறந்த திட்டங்களாக திறம்பட செயல்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த உறுதிமொழிகளை மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். குறிப்பாக நகர்புறங்களில் கூடுதலாக 36 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார். ஆனால் மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலமாக தமிழகத்திற்கு ரூ.921.99 கோடி நிதி ஒதுக்கி பணிகளை செயல்படுத்தி வருகிறது. 26 லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டது. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் ஒரு கோடி குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

எழில்மிகு மாநகரங்களை உருவாக்குவோம் என்கிறார். ஆனால் தமிழகத்தில் 11 மாநகரங்களை மத்திய அரசு தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உயர்தர ஊரக கட்டமைப்பை உருவாக்குவதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிரதம மந்திரி ஆவாஸ் என்ற அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்ற மத்திய அரசு ரூ.12 ஆயிரத்து 117 கோடி ஒதுக்கி பணிகளை செயல்படுத்தி வருகிறது.

11 புதிய அரசு மருத்துவ கல்லூரி

பட்டியல் இனத்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்த்தப்படும் என்று தி.மு.க. அறிவித்து உள்ளது. ஆனால், மத்திய அரசு ரூ.59 ஆயிரத்து 48 கோடி ஒதுக்கி ஏற்கனவே இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மருத்துவர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவோம் என்கிறார். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு தி.மு.க. அறிவித்த அனைத்து உறுதிமொழிகளையும் மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் நலன் கருதி வேளாண் திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இதனை இப்போது எதிர்க்கும் தி.மு.க. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதனை செயல்படுத்துவதாக அறிவித்தது. இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரித்து காட்டி உள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஏழைகளின் நிலங்களை அபகரிக்க மாட்டோம், ஊழல் செய்ய மாட்டோம், கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டோம், தமிழ் மக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்த மாட்டோம், தாழ்த்தப்பட்டோரை தி.மு.க. தலைவராகவோ அல்லது முதல்-அமைச்சராகவோ அமர்த்துவோம், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம், தன்னுடைய மகனையோ, குடும்பத்தினரையோ கட்சியிலும், ஆட்சியிலும் முன்னிறுத்தி வாரிசு அரசியல் செய்ய மாட்டோம் என்ற 7 உறுதிமொழியையும் தமிழ் மக்களுக்கு அளிக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கே.டி.ராகவன், கு.க.செல்வம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Next Story