புதுச்சேரி திமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு


புதுச்சேரி திமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு
x
தினத்தந்தி 9 March 2021 5:22 AM GMT (Updated: 2021-03-09T10:52:57+05:30)

புதுச்சேரி திமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

புதுச்சேரி,

தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. அதே கூட்டணிதான் புதுவையிலும் அமைகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுகின்றன.

காங்கிரஸ்-தி.மு.க. இடையே நேற்று முன்தினம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோரும், தி.மு.க. சார்பில் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடம் நடந்தது. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடந்த தேர்தலின்போது தி.மு.க.வுக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது 15 இடங்கள் வரை தி.மு.க. சார்பில் கேட்பதாகவும், கூட்டணிக்கு தாங்களே தலைமை ஏற்போம் என்றும் கூறியதாக தெரிகிறது.

ஆனால் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகளுக்கும் இடம் ஒதுக்கவேண்டும் என்பதால் 15 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்தது.

இந்நிலையில் புதுச்சேரி திமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் தொகுதி பங்கீடு இறுதியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story