மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சி திட்டங்கள் ‘கன்னியாகுமரி குட்டி சிங்கப்பூராக மாறும்; இழந்த பெருமையை மதுரை பெறும்’


மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சி திட்டங்கள் ‘கன்னியாகுமரி குட்டி சிங்கப்பூராக மாறும்; இழந்த பெருமையை மதுரை பெறும்’
x
தினத்தந்தி 10 March 2021 4:49 AM IST (Updated: 10 March 2021 4:49 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை படி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படுவதுடன், கன்னியாகுமரி குட்டி சிங்கப்பூராக மாறுவதுடன், மதுரை இழந்த பெருமையை பெறும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, 

சென்னை, கோயம்பேட்டில் உள்ள பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பா.ஜ.க. தேர்தல் அறிக்கை பொதுமக்களுக்கு கூறும் சிறப்பு அம்சம் என்ன?

பதில்:- மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்படும். குறிப்பாக தற்போதைய இளைஞர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும். எனக்கு குழந்தைகள் கிடையாது. கன்னியாகுமரி மாவட்டத்து இளைஞர்களை என்னுடைய பிள்ளைகளாக பார்த்து அவர்களுக்கும், அவர்களுடைய பேரக்குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்து கொண்டு இருக்கிறேன். கண்டிப்பாக செயல்படுத்துவேன்.

கடல் பாசியில் அல்வா

கேள்வி:- தி.மு.க. அறிவித்துள்ள 7 உறுதிமொழிகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- தி.மு.க. அறிவித்த 7 திட்டங்களும் பொதுமக்களை ஏமாற்றும் திட்டங்கள். இதை அவர்களால் செயல்படுத்த முடியாது. கடல்பாசியில் அல்வா செய்து தருவோம் என்று கூறிய கட்சி தி.மு.க. என்பதை மறக்க கூடாது.

கேள்வி:- தமிழக முன்னேற்றத்திற்கு வேறு என்ன திட்டங்கள் கைவசம் உள்ளது?

பதில்:- மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. மீனாட்சி அம்மனின் பூமி, அவள் அரசாட்சி செய்யும் மதுரை இழந்த பெருமையை மீண்டும் பெறும்.

குட்டி சிங்கப்பூர்

கேள்வி:- கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றால் எந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவீர்கள்?

பதில்:- அனைத்து தரப்பு மக்களும் தற்போது கூறுவது கடந்த முறை ஏமாந்துவிட்டோம். இரண்டரை ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை. கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் பாதியிலேயே நிற்கிறது. அவற்றை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்துவதில் அதிக அக்கறை காட்டுவேன். அத்துடன் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரியில் பல்வேறு கனவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு குட்டி சிங்கப்பூராக மாற்றுவோம்.

விமானம் தரையிறங்கும்

கேள்வி:- கன்னியாகுமரியில் விமானநிலையம் கொண்டுவரப்படும் என்று பல கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றனவே?

பதில்:- கன்னியாகுமரியில் விமானநிலையம் கொண்டு வர பல முயற்சிகளை எடுத்தேன். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தார்கள். தேர்வு செய்யப்பட்ட உப்பளம் பகுதியில் காற்று மாறுபட்ட திசைகளில் வீசுவது தான் பிரச்சினையாக இருக்கிறது. எது எப்படியே அனைத்தையும் சரி செய்து கன்னியாகுமரியில் விமானம் தரை இறங்கும்.

கன்னியாகுமரி கோட்டம்

கேள்வி:- நீண்ட நாள் கோரிக்கையான கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே பாதைகள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படுமா?

பதில்:- அந்த கோட்டத்தில் இருப்பதால் இங்கு வேலை நடக்கவில்லை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன். எதி்ர்ப்பேன், கொண்டு வந்தே தீருவேன். என்னுடைய விருப்பம் கன்னியாகுமரியில் தனி கோட்டமே வர வேண்டும் என்பது தான். அதற்கு தேவையான கட்டுமானம் அனைத்தையும் கொண்டுவந்துவிட்டால் நான் என்ன கேட்பது, எந்த அரசு வந்தாலும் கொண்டுவந்து தான் தீரவேண்டும். அந்த வேலையை தான் இப்போது செய்துவருகிறோம். சுருங்கி இருக்கும் நாகர்கோவிலை விரிவுப்படுத்துவதற்கான வேலைகள் நடக்கும். பார்வதிபுரத்திலும் ரெயில் நிலையம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இளைஞர்களின் எதிர்காலம்

கேள்வி:- தமிழக வாக்காளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: ஏமாற்றி பிழைப்பவர்களை நம்பி ஏமாந்தது போதும், இந்த முறை தமிழகம் முன்னேற்றம் அடையவும், தமிழக இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திரமோடி தனிகவனம் செலுத்தும் போது அதை முறையாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் எல்லா பாகுபாடுகளையும் மறந்து ஒருங்கிணைந்து பா.ஜ.க. இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story