தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை நாளை அல்லது மறுநாள் வெளியிட திட்டம்


தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை நாளை அல்லது மறுநாள் வெளியிட திட்டம்
x
தினத்தந்தி 10 March 2021 3:46 AM GMT (Updated: 10 March 2021 3:46 AM GMT)

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை நாளை (வியாழக்கிழமை) அல்லது 12-ந் தேதி மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிடைந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகளை வழங்குவது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனுடன் நேற்று காலை, மாலை என 2 முறை பேச்சுவார்த்தை நடந்தது. இதுகுறித்து காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்கள் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இரண்டில் ஒன்றும், சிதம்பரம், பாபநாசம் ஆகிய இரண்டில் ஒன்றும் கேட்டோம். நாங்கள் விரும்பிய 3 தொகுதிகள் கிடைத்து இருக்கிறது. இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார்’ என்றார்.

ம.தி.மு.க. துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா கூறும்போது, ‘ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டுள்ள 6 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. அது எந்தெந்த இடங்கள் என்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவும் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொகுதி பங்கீட்டு குழு தலைவர் சுப்பராயன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர், ‘தங்கள் கட்சி விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி உள்ளதாகவும், தி.மு.க. தலைமை நல்ல முடிவை அறிவிக்கும்’ என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நிர்வாகிகள் நேற்றிரவு 7 மணியளவில் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிந்து, கே.எஸ்.அழகிரி மற்றும் நிர்வாகிகள் இரவு 8.50 மணியளவில் வெளியே வந்தனர். அப்போது கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், ‘பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக இருந்தது. நாளை (இன்று) 12 மணியளவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் 25 தொகுதிகள் அடங்கிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டு முடிவு செய்யப்படும்’ என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் நேற்று பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் விரும்பும் தொகுதிகள் பட்டியலை தி.மு.க. தலைமையிடம் ஏற்கனவே வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தலா ஒரு தொகுதிகள் எவை என்பது இன்று இறுதி செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் தி.மு.க. போட்டியிடும் 174 தொகுதிகள், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 60 இடங்கள் என்னென்ன? என்ற பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 10-ந் தேதி (அதாவது இன்று) வெளியிடப்படும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் தற்போதைய நிலவரப்படி, தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 11-ந் தேதி (நாளை) அல்லது 12-ந் தேதி (நாளை மறுதினம்) வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தி.மு.க. தேர்தல் அறிக்கை நாளை வெளியாக உள்ளதால், அதனுடன் வேட்பாளர்கள் பட்டியலையும் மு.க.ஸ்டாலின் வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் காணப்படுகிறது.

Next Story