நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எஞ்சிய 3 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார். ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதற்கு முன்னர் நந்திகிராமில் உள்ள ஷிவ் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story