2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. நிறைவேற்றிய-நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன?


2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. நிறைவேற்றிய-நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன?
x
தினத்தந்தி 11 March 2021 3:59 AM IST (Updated: 11 March 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. சொன்னதில் நிறைவேற்றிய-நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன? என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னை,

திருச்சியில் கடந்த 7-ந்தேதி தி.மு.க. சார்பில் நடந்த ‘விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து மறுநாள் அதாவது 8-ந்தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதுபோன்ற கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் ஆளும் கட்சியின் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கை மீதான கவனத்தை ஈர்த்துள்ளது. அ.தி.மு.க. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது. வாக்குறுதியாக கொடுக்காத சிலவற்றையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதே சமயத்தில், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த பல கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவும் இல்லை.

பயிர் கடன் தள்ளுபடி

ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடி. வீட்டு பயன்பாட்டுக்கான 100 யூனிட் மின்சாரம் இலவசம். கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம். விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2-வது தடவையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் அறிவிப்பில் இடம் பெறவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக 6 மாவட்டங்கள், 9 வருவாய் கோட்டங்கள், 32 தாலுகாக்கள் நிறுவப்பட்டன. எடப்பாடி பழனிசாமியின் குடிமராமத்து திட்டம் பெரிய அளவில் எடுத்துச் செல்லப்பட்டது.

சொல்லாதவை

தேர்தல் அறிக்கையில் 5 மருத்துவ கல்லூரிகள் புதிதாக அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்கியிருக்கிறது. மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு போன்ற சொல்லாததையும் செய்திருக்கிறது.

நிறைவேற்றாத அறிவிப்புகள்

2016 தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றப்பட்டதை போலவே, நிறைவேற்றாத அறிவிப்புகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது.ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும், பொது இடங்களில் இலவச வை-பை, மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கோ-ஆப்டெச்சில் பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க ரூ.500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்,

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும், அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவப்படும், அம்மா வங்கி அட்டை அனைவருக்கும் வழங்கப்படும் என்று 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

ரூ.25-க்கு ஒரு லிட்டர் பால்

மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் டி மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட ஆவின் பால் 1 லிட்டர் ரூ.25-க்கு என குறைந்த விலையில் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இதேபோல மீனம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்திருக்கிறது. கச்்சத்தீவு மீட்கப்படும், இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போன்ற அறிவிப்புகளும் இன்னமும் வெற்று அறிவிப்புகளாக காகிதத்திலேயே உள்ளன.

தமிழகத்தின் கடன் அளவு உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், இந்த முறை தேர்தல் வாக்குறுதியாக இடம் பெறும் கவர்ச்சிக்கரமான அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படுமா? என்பதே தற்போது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story