அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்ப்ட்டு உள்ளது தொகுதிகள் விவரம் வருமாறு:-
சென்னை
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்க உள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வருகிறது. இதுவரையில் பா.ம.க. வுக்கு 23, பா.ஜ.க. 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தநிலையில், குறைந்த தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது.
இதனை தொடர்ந்து த.மா.கா.வுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 12 இடங்களை கேட்ட த.மா.கா.வுக்கு அ.தி.மு.க. 3 இடங்கள் ஒதுக்க முன்வந்தது. இதனால் இதை த.மா.கா. ஏற்கவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.
இந்த பரபரப்புக்கு இடையே அ.தி.மு.க. நேற்று 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஏற்கனவே 6 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அ.தி.மு.க தரப்பில் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது த.மா.கா. தரப்புக்கு அதிர்ச்சியை அளித்தது. அ.தி.மு.க. பட்டியலில் த.மா.கா. சார்பில் கேட்கப்பட்ட தொகுதிகளும் அடங்கும்.
அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் 14 தொகுதிகளே மீதமுள்ளது. இதற்கிடையே, த.மா.கா. அவசர கூட்டத்தை இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டியது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட தொகுதி பங்கீடு விவரம், சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் நிருபர்களுடனான சந்திப்பில் ஜி.கே. வாசன் கூறியதாவது:-
அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், 6 தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக தெரிவித்துள்ளது. அதிமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம். சட்டபேரவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என கூறினார்.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
திரு.வி.க.நகர், பட்டுக்கோட்டை, ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story