புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள், தி.மு.க.வுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கீடு


புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள், தி.மு.க.வுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 12 March 2021 2:51 AM IST (Updated: 12 March 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளும், தி.மு.க.வுக்கு 13 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஒப்பந்தம் ஆனது.

சென்னை, 

தமிழக அரசியலை பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரசும், புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க.வும் இடம் பெற்று தேர்தலை சந்திப்பது வழக்கம். அதன்படி தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, என்னென்ன இடங்கள் என்பதும் அடையாளம் காணப்பட்டது.

ஆனால் புதுச்சேரி கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டது.

ஏனென்றால், தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கூட்டணிக்கு தி.மு.க.தான் தலைமை ஏற்க வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியை விட தி.மு.க. கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் அம்மாநில தி.மு.க. பொறுப்பாளர்கள் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தனர்.

சென்னையில் முகாம்

இதன் காரணமாக புதுச்சேரியில் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது? என்ற கேள்வி அந்த கூட்டணியில் எழுந்தது. ஆனால் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை நாங்கள் ஏற்பது போன்று, புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை தி.மு.க. ஏற்க வேண்டும் என்று அம்மாநில காங்கிரசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனால் புதுச்சேரியில் தி.மு.க.-காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே நடைபெற்ற 2 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு, கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி அவர்கள் கடந்த 9-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, புதுச்சேரி மாநில தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையும் சுமுக உடன்பாடு ஏற்படாமல் முடிவடைந்தது. புதுச்சேரி கூட்டணியில் தி.மு.க. நிலைப்பாடு குறித்து மு.க.ஸ்டாலினும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

சுமுக உடன்பாடு

இந்தநிலையில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட நிர்வாகிகள் நேற்று மதியம் 12.20 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தனர். தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு-புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் சுப்பிரமணி, நாராயணசாமி உள்பட நிர்வாகிகள் நேற்று மாலை அண்ணா அறிவாலயம் வந்தனர். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், தினேஷ் குண்டுராவும் கையெழுத்திட்டனர்.

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி

பின்னர் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், தி.மு.க. 13 இடங்களிலும், மீதமுள்ள 2 இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு,

விடுதலை சிறுத்தைகள்

2 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க.வுக்கு 9 இடங்கள் அளிக்கப்பட்டது. இந்த முறை கூடுதலாக 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Next Story