பெருந்துறையில் மீண்டும் ‘சீட்’ கிடைக்காதது வருத்தம்: தொகுதி மக்களையும், கட்சியினரையும் சந்தித்து அடுத்தக்கட்ட முடிவு


பெருந்துறையில் மீண்டும் ‘சீட்’ கிடைக்காதது வருத்தம்: தொகுதி மக்களையும், கட்சியினரையும் சந்தித்து அடுத்தக்கட்ட முடிவு
x
தினத்தந்தி 12 March 2021 3:58 AM IST (Updated: 12 March 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

‘‘பெருந்துறையில் மீண்டும் ‘சீட்’ கிடைக்காதது மனவருத்தம் அளிக்கிறது’’, என்றும், ‘‘தொகுதி மக்களையும், கட்சியினரையும் சந்தித்து அடுத்தக்கட்ட முடிவு அறிவிப்பேன்’’, என்றும் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

சென்னை, 

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ‘சீட்’ கிடைக்காத எம்.எல்.ஏ.க்களின் வரிசையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாசலமும் ஒருவர். அந்த தொகுதியில் வேட்பாளராக எஸ்.ஜெயக்குமாரை அ.தி.மு.க. அறிவித்துள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கும் தோப்பு வெங்கடாசலம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

‘சீட்’ கிடைக்காதது வருத்தமே...

ஜெயலலிதா இடத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பார்க்கிறோம். அதன்படிதான் கட்சிக்கு உண்மையாகவும் இருக்கிறோம். அ.தி.மு.க. மீதான என் விஸ்வாசம் மாறாது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலை நான் ஏற்கிறேன். ஆனால் பெருந்துறை தொகுதியில் என்னென்ன பணிகளை நான் செய்திருக்கிறேன்? என்பதை கட்சி தலைமை பார்க்கவேண்டும்.

எனக்கு ‘சீட்’ கிடைக்காதது மனவருத்தமே... அதேவேளை உங்களை ஏன் ஒதுக்கினார்கள்? என்று எனது தொகுதி மக்களும், கட்சியினரும் என்னை கேட்கிறார்கள். எந்த அடிப்படையில் இந்த வேட்பாளர் தேர்வு நடந்தது? என்பது எனக்கு தெரியவில்லை. இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எனது கருத்தை தெரிவித்துள்ளேன். விரைவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க இருக்கிறேன்.

அடுத்தக்கட்ட முடிவு

அதேவேளை நான் ஒதுக்கப்பட்டதற்கு 2 அமைச்சர்களின் செயல்பாடு காரணமாக இருக்குமோ? என்று கேட்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் என்னை பற்றி தவறான தகவல்களை அமைச்சர்கள் வழங்கியிருந்தால் அது தவறு. தனிப்பட்ட முறையில் பார்க்காமல், கட்சிக்கு எப்படிப்பட்டவன்? என்பதை பார்க்கவேண்டும். போட்டி, பொறாமை மனதளவில் மட்டுமே இருக்கவேண்டும்.

அடுத்தகட்டமாக என் தொகுதி மக்களையும், தொண்டர்களையும் சந்தித்த பின்னர் எனது முடிவை அறிவிப்பேன். இப்போது பெருந்துறைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை மூலம் கட்சியின் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார். அ.தி.மு.க.வில் என்னை போன்ற உண்மையான தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமை பரிசீலிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story