"போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது"-துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது-துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 12 March 2021 10:20 AM GMT (Updated: 12 March 2021 10:21 AM GMT)

”அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என வேட்புமனு தாக்கல் செய்த பிறகு துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்தமாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது. அதனுடன் காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை முடிக்கும் நிலையில் உள்ளன. அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. அதன் கூட்டணியில் பாமக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. மேலும் சிறுசிறு கட்சிகளும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. 

தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விரைவில் பெயரை அறிவிக்க உள்ளன.

இதற்கிடையில், சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 3 மணிவரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், "அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. போடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன், அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்" என்றார்.

போடி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட உள்ள நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story