திமுக வேட்பாளர்கள் பட்டியல் ஒரு அலசல்


திமுக வேட்பாளர்கள் பட்டியல் ஒரு அலசல்
x
தினத்தந்தி 12 March 2021 3:32 PM GMT (Updated: 12 March 2021 3:32 PM GMT)

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

சென்னை

மொத்தமுள்ள  234  சட்டசபைதொகுதிகளில் 173 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 61 தொகுதிகளில் திமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. 15 தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.இதில் திமுக, அதிமுகவுடன் 129 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது.14 தொகுதிகளில் திமுக - பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 188 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் பட்டியலில் 9 மருத்துவர்கள், 12 பெண்கள், 28 வக்கீல்கள்  இடம் பெற்றுள்ளனர்.

15 எம். எம்.எல் ஏக்களுக்கு வாய்ப்பில்லை

திமுக எம்எல்ஏக்கள் 97 பேரில் 82 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், 15 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவுக்கு மாறியதால் அந்த தொகுதியில் டாக்டர்.நா.எழிலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ரங்கநாதன், எழும்பூர் தொகுதி எம்எல்ஏ ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகருக்கு போட்டியிடும் வாய்ப்பு கிட்டவில்லை.

மதுராந்தகம் தொகுதி மதிமுக வசம் சென்றதால் எம்எல்ஏ புகழேந்திக்கு போட்டியிடும் வாய்ப்பு இல்லை. 

செய்யூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், ஆர்த்தி அரசுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கீழவேளுர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் மதிவாணனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. 

குளித்தலை தொகுதி எம்எல்ஏ ராமர், கூடலூர் தொகுதி எம்எல்ஏ திராவிடமணி, ஓசூர் எம்எல்ஏ சத்யா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன் ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் தற்போதைய எம்எல்ஏ இதயவர்மன் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

புதுக்கோட்டை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அந்த தொகுதி எம்எல்ஏ சரவணன், பாளையங்கோட்டை எம்எல்ஏ மைதீன்கான் ஆகியோருக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

திமுக எம்எல்ஏக்களில் 2 பேர் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.

பெண் வேட்பாளர்கள்

வேட்பாளர் பட்டியலில்1 2 பெண்கள் இடம் பெற்று உள்ளனர். தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த தொகுதி எம்எல்ஏ ஒய் பிரகாஷ் ஓசூர் தொகுதியில் களமிறங்குகிறார். அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியில் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

செங்கல்பட்டு தொகுதியில் வரலட்சுமி மதுசூதனன், குடியாத்தம் தொகுதியில் வி.அமலு, திண்டிவனம் தொகுதியில் சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கெங்கவல்லி தொகுதியில் ரேகா பிரியதர்ஷினியும், ஆத்தூர் தொகுதியில் ஜீவா ஸ்டாலின் என்பவரும், தாராபுரம் தொகுதியில் கயல்விழி செல்வராஜ் என்பவரும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் க.சிவகாமசுந்தரி, மானாமதுரையில் ஆ.தமிழரசி, மதுரை மேற்கு தொகுதியில் சி.சின்னமாள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் கீதா ஜீவன், ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா, மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகின்றனர்.

தந்தை -மகன் ஒருசேரப் போட்டி

திமுக சார்பில் சென்னையில் தந்தை, மகனான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒரே தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பெரியசாமி, இ.பெ.செந்தில்குமார் ஆகிய இருவரும் ஒருசேரப் போட்டியிடுகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும்,( 3வது முறை) இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதேபோல் இந்த முறையும் திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை, மகன் இருவர் திமுக சார்பில் களம் இறங்கியுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அதே ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமியும், அவரது மகன் இ.பெ.செந்தில்குமார் பழநி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுக,அதிமுக.சார்பில் உடன்பிறந்த சகோதரர்கள் இத்தேர்தலில் போட்டியிட உள்ளனர். இரண்டாவது முறையாக இவர்கள் எதிரெதிர் அணியில் களம் இறங்குகின்றனர்.

கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தங்கதமிழ்ச்செல்வன் அமமுகவிற்கு மாறினார். இதனால் 2019-ம் ஆண்டு இங்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக.சார்பில் மகாராஜனும், அதிமுக. சார்பில் லோகிராஜனும் போட்டியிட்டனர். 

இந்த் தேர்தலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக.வேட்பாளராக லோகிராஜனும், இன்று வெளியான திமுக.பட்டியலில் மகாராஜனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.இருவரும் உடன்பிறந்த சகோதாரர்கள் ஆவர். இதனால்  இந்த தொகுதிகள்  மாநில அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

மதுரை மத்திய தொகுதியில், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மகனும், திமுக ஐடி.விங் செயலாளருமான பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார்.

பேரன்கள்

கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிடுகிறார். 'பேராசிரியர்' க.அன்பழகனின் பேரன் அ.வெற்றியழகன் வில்லிவாக்கம் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிடுகிறார்.

விஐபி தொகுதிகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

இராதாபுரம் தொகுதியில் அப்பாவு, அம்பாசமுத்திரம் தொகுதியில், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், திருச்செந்தூர் தொகுதியில் நடப்பு எம்எல்ஏ அனிதா இராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

மதுரை வடக்கு தொகுதியில் தளபதியும், முதுகுளத்தூர் தொகுதியில் ராஜகண்ணப்பனும் போட்டியிடுகின்றனர். கம்பம் தொகுதியில் கம்பம் இராமகிருஷ்ணனும், விருதுநகரில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனும் களம் காண்கின்றனர்.

மானாமதுரையில் முன்னாள் அமைச்சர் தமிழரசியும், புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ரகுபதியும், தஞ்சாவூரில் டி.கே.ஜி.நீலமேகமும், குன்னம் எஸ்.எஸ்.சிவசங்கரும், திருவாரூரில் பூண்டி கலைவாணன் திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

மன்னார்குடி தொகுதியில், நடப்பு திமுக எம்எல்ஏ, டி.ஆர்.பி.இராஜா களம்காண்கிறார்

திருச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், நடப்பு எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மீண்டும் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஈரோடு மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் முத்துசாமியும், சேலம் வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருணும், திமுக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியனும், விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர்ராஜாவும், தியாகராயர் நகரில் ஜெ.கருணாநிதியும் களம்காண்கின்றனர்.துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவும், போட்டியிடுகின்றனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை வென்றுள்ள போடிநாயக்கனூரில் அவரை எதிர்த்து திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

 அதேபோல் தொண்டாமுத்தூரில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியை எதிர்த்து திமுக சார்பாக சிவசேனாதிபதி களமிறங்குகிறார். 

கரூர் கரூரில் போக்குவரத்து துறை அமைச்ர் எம்.ஆர் விஜய் பாஸ்கரை எதிர்த்து செந்தில் பாலாஜி களமிறங்குகிறார். சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். 

திருநெல்வேலியில் திமுக சார்பில் எ.எல்.எஸ்.லட்சுமணன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் யார் போட்டியிட உள்ளார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் நயினார் நாகேந்திரன் இன்றே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
 
தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகிறார்.

மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூவை எதிர்த்து திமுக வேட்பாளராக சின்னம்மாள் போட்டியிடுகிறார்.

வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் முருகன் போட்டியிடுகிறார்.
 
10வது முறை...

திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் 10வது முறையாக போட்டியிடுகிறார்.முதல்முறையாக 1971இல் காட்பாடியில் போட்டியிட்ட துரைமுருகன், 1977 மற்றும் 1980இல் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.பின், 1984, 1989, 1991, 1996, 2000, 2004, 2008, 2012, 2016 என தொடர்ந்து 9 முறை அந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தலில் 11 முறை போட்டியிட்டுள்ள துரைமுருகன், 7 முறை காட்பாடியிலும், 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் வென்றுள்ளார். 

Next Story