ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்;தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்


ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்;தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் - எடப்பாடி பழனிசாமி  பிரசாரம்
x
தினத்தந்தி 12 March 2021 4:33 PM GMT (Updated: 12 March 2021 4:33 PM GMT)

ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்;தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் வாழப்பாடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

சேலம்

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவு கேட்டு வாழப்பாடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது   2வது கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்தத் தேர்தல் தர்மத்திற்கும்,அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல். தமிழக மக்களுக்காக நல்ல திட்டங்களை தந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோருக்கு வாரிசுகள் இல்லை. மக்களாகிய நாம் தான் இவர்களுக்கு வாரிசுகள். கருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு குடும்பம். ஸ்டாலினும் தற்போது வாரிசு அரசியலை நடத்திக் கொண்டு வருகிறார். தமிழகத்தில் தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணப்பட்டு, தான் முதல்வர் ஆகிவிட்டத்தைபோல நினைத்து, ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார். 

நாட்டுக்கு நன்மை செய்பவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பாரத பிரதமரே தமிழகத்தை பாராட்டியுள்ளார். குடிமாரத்து திட்டத்தை கொண்டு வந்து நீர்நிலைகளை துார்வாரி மேம்படுத்தியுள்ளோம். வாழப்பாடி அருகே ஏரி துார்வாரும் திட்டத்தை தொடக்கி வைக்க வந்திருந்த எனக்கு விவசாயி ஒருவர் பசுமாடு ஒன்றை பரிசாக வழங்கினார். 

தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி மழைநீர் தேக்கி வைத்து விவசாய பாசனத்திற்கு வழிவகை செய்துள்ளோம். தமிழகத்தில் 27.5 லட்சம் மெட்ரிக் டன் உணவுப்பொருள் உற்பத்தி, 31 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. 3.5 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உணவுப் பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளது. நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம். அதிக மின் உற்பத்தி செய்து, நாட்டில் மிகை மின் மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்து இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் ஒரு மாதம், 3 மாதம், 6 மாதத்தில் காணாமல் போய்விடுமென ஸ்டாலின் கூறி வந்தார். இதனை தகர்த்தெரிந்து, பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு நான்கு ஆண்டுகள் நிலையான ஆட்சி நடத்தி, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன்.நான் ஒரு விவசாயி உழைக்கப் பிறந்தவன். திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார். வாழப்பாடியிலேயே மேடை அமைத்து அவரோடு நேருக்கு நேர் விவாதிக்க தயார். காலையில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்திலும் இதை நான் தெரிவித்தேன். 

ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. திமுக என்றாலே அராஜக கட்சி, அராஜக ஆட்சி. திமுக வினர் ஆட்சிக்கு வரலாமா? மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து அதிகமாகி விடும். இப்போது வியாபாரிகள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மீண்டும் கொள்ளையடிக்கும் கும்பல் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. இந்த மாவட்டத்தை சேர்ந்த நான் தமிழக முதல்வராக இருக்கிறேன். மாதத்திற்கு இருமுறை சேலத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். இந்த வாழப்பாடி பகுதியை முழுமையாக எனக்கு தெரியும்.

 மக்களின் பிரச்சினைகளை அறிந்த ஒருவர் முதலமைச்சராக இருப்பது நமக்கெல்லாம் பெருமை. மேட்டூர் காவிரி நதி உபரிநீரை, இப்பகுதியிலுள்ள ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளிலும் நிரப்பும் திட்டம் எனது மனதில் உள்ளது. உங்கள்  வீட்டில் ஒருவர் பதவிக்கு வந்தால் எப்படி மகிழ்ச்சி கொள்ளவீர்களோ அதைப்போல எண்ணி அதிமுக விற்கு வாக்களியுங்கள். எளிமையாக பழகக்கூடிய அதிமுக வேட்பாளர் கு.சித்ராவை ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக மீண்டும் வெற்றிப்பெறச் செய்யுங்கள் என்றார்.

தொடர்ந்து கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து தம்பம்பட்டியில் முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு ஆதரவாக ராணிப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Next Story