புதுச்சேரியில் பாமக தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது - பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் பேட்டி
புதுச்சேரியில் பாமக தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் கொடுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் என்.ஆர், காங்கிரசுக்கு மட்டும் 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மற்றொரு கூட்டணி கட்சியான அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
ஆனால், பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு கட்சியான பாமக தனித்துவிடப்பட்டுள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பாமக-பாஜக இடையேயான பேச்சுவார்தையில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், தொகுதிபங்கீடு தொடர்பாக பாமக-பாஜக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
பாஜக மேலிட பொறுப்பாளருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் கூறுகையில், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக-வுக்கு 3 தொகுதிகள் கூட ஒதுக்க பாஜக முன்வரவில்லை. பாமக தனித்து நிற்க வேண்டிய சூழல்நிலை உள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது’ என்றார்.
Related Tags :
Next Story