அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு; எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் புதிய திட்டங்களை அறிவிக்கிறார்கள்


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு; எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் புதிய திட்டங்களை அறிவிக்கிறார்கள்
x
தினத்தந்தி 13 March 2021 7:32 PM GMT (Updated: 2021-03-14T01:02:26+05:30)

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகிறது. தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பிரதான கட்சியான அ.தி.மு.க. 178 தொகுதிகளில் களமிறங்குகிறது. பா.ம.க., பா.ஜ.க, த.மா.கா. உள்பட கூட்டணி கட்சிகளுக்கு 55 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த 8-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘‘அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதில் மக்களின் மனம் நிறைவுபெறும் விதத்தில் அறிவிப்புகள் இடம்பெறும். மகளிர் நலனுக்காக குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் விதமாக குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1,500 குடும்பத்தலைவியிடம் வழங்கப்படும். மேலும் பல அறிவிப்புகள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்’’ என்று அறிவித்திருந்தார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை
இந்த அறிவிப்புகளால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மீதான எதிர்பார்ப்பு வெகுவாக கூடியிருக்கிறது. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்? என்னென்ன கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற போகிறது? என்ற கேள்வி எழுந்து வந்தது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அ.தி. மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இதற்காக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8.30 மணியளவில் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகிறார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்றே தேனியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார்.

அந்தவகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

Next Story