வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே காங்கிரசார் தனித்தனியாக போராட்டம்; சத்தியமூர்த்தி பவனில் பெரும் பரபரப்பு


வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே காங்கிரசார் தனித்தனியாக போராட்டம்; சத்தியமூர்த்தி பவனில் பெரும் பரபரப்பு
x
தினத்தந்தி 13 March 2021 9:13 PM GMT (Updated: 13 March 2021 9:13 PM GMT)

வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்னரே காங்கிரசார் சத்தியமூர்த்தி பவனில் தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாய்ப்பு கிடைக்காதவர்கள் வருத்தம்
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. களத்தில் இறங்கி மல்லுக்கட்ட தயாராகி வரும் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இதில் வாய்ப்பு கிடைக்காதவர்களும், கூட்டணி கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கியதால் விரக்தியடைந்தவர்களும் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜான்சிராணி குமுறல்
ஆனால் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் முன்னரே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோஷ்டி தலைவர்கள் சிலர் நேற்று சத்தியமூர்த்தி பவனில் தனித்தனியாக போராட்டம் நடத்தியது, காங்கிரசார் மட்டுமின்றி கூட்டணி தலைவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.இந்த பிரச்சினைக்கு பிள்ளையார் சுழியாக, ‘காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை’ என்று தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் ஜான்சிராணி தனது மனகுமுறலை வெளிப்படுத்தினார்.

உண்ணாவிரத போராட்டம்
இதன் தொடர்ச்சியாக, ‘காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது’ என்பதை வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி., பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்துக்கு பதிலடியாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மத்திய சென்னை மாவட்ட தலைவருமான எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் அவரது 
ஆதரவாளர்கள் சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் உண்ணும் போராட்டம் நடத்தினர்.

கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை
சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விஷ்ணுபிரசாத் எம்.பி.யிடம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. இங்கு அனைவரும் கருத்து கூறலாம். தொண்டர்கள் கருத்தை தலைமை கேட்கும். போராட்டக்காரர்கள் கருத்துகளை கேட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜயதரணிக்கு எதிராக தர்ணா
இது ஒருபுறம் இருக்க, விளவங்கோடு தொகுதியில் விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கக்கூடாது என்று கூறி, அந்த தொகுதியின் வட்டார தலைவர்கள் தலைமையில் ஒரு தரப்பினர் சத்தியமூர்த்திபவன் அலுவலகத்துக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இத்தகைய போட்டி போராட்டங்கள் மற்றும் தர்ணா போராட்டத்தால் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க.வினர் திரும்பி சென்றனர்
இந்த களேபரங்களுக்கு மத்தியில், தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு தலைமையில் வட சென்னைக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் காங்கிரஸ் தலைவர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.அங்கு போராட்டங்கள் நடைபெறுவது தெரியாமல் வந்த அவர்கள், மும்முனை போராட்டத்தை பார்த்ததும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். எனவே அவர்கள் வந்த வழியே திரும்பி சென்றனர்.வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் முன்பே இப்படி என்றால், பட்டியல் வெளியான பின்னர் என்னவெல்லாம் ஆகுமோ? என்பது தான் காங்கிரஸ் கட்சியின் விசுவாசிகளின் கவலையாக உள்ளது.

Next Story