தமிழக பா.ஜ.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்பு; நூதன பிரசார இயக்கம் தொடக்கம்


தமிழக பா.ஜ.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்பு; நூதன பிரசார இயக்கம் தொடக்கம்
x
தினத்தந்தி 13 March 2021 9:37 PM GMT (Updated: 13 March 2021 9:37 PM GMT)

சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் ‘உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை’ பிரசார இயக்கம் நேற்று தொடங்கியது.

இந்த திட்டத்தை பா.ஜ.க. துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சக்கரவர்த்தி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், வர்த்தகர் அணி துணைத்தலைவர் சி.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவி, நடிகர் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து வி.பி.துரைசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் பா.ஜ.க. பூத் கமிட்டி சார்பில் மக்களுக்கு ‘உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை’ என்ற கோரிக்கை அட்டை வினியோகிக்கப்படும். இந்த அட்டையில் மக்கள் விரும்பும் திட்டங்கள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை எழுதி அதற்கான பெட்டிகளில் போடவேண்டும். அந்த வகையில் 15-ந் தேதி வரை இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெறும். 7878786060 என்ற எண்ணிலும் விருப்பங்களை தெரிவிக்கலாம். பின்னர் இந்த அட்டைகள் தொகுதி வாரியாக சேகரிப்பட்டு எச்.ராஜா தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் பெரும்பான்மையான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்’’ என்றார்.

இது பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான முன்னோட்ட பணியாகவே பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் அந்த அட்டையில் தங்கள் தொகுதி மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து எழுதி, அதற்கான அட்டைப்பெட்டிகளில் போட்டனர்.


Next Story