இந்த தேர்தல் அதிகாரத்துக்கான போட்டி - திருமாவளவன்
இந்த தேர்தல் மதச்சார்புக்கும், மதச்சார்பின்மைக்கும் இடையேயான போட்டி என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 6 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது.
அதன்படி, காட்டுமன்னார் கோவில் (தனி) - சிந்தனை செல்வன், வானூர் (தனி) - வன்னி அரசு, அரக்கோணம் (தனி) - கவுதமசன்னா, செய்யூர் (தனி) - பனையூர் பாபு, திருப்போரூர் (பொது) - எஸ்.எஸ்.பாலாஜி, நாகப்பட்டினம் (பொது) - ஆளூர் ஷா நவாஸ் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சந்தித்தார். விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், இந்த தேர்தல் அதிகாரத்துக்கான போட்டி. மதச்சார்புக்கும், மதச்சார்பின்மைக்கும் இடையேயான போட்டி இது. தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை’ என்றார்.
Related Tags :
Next Story