சட்டப்பேரவைத் தேர்தல்: ஓபிஎஸ்-இபிஎஸ் சொத்து மதிப்பு எவ்வளவு? - வேட்புமனுவில் வெளியான தகவல்
சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ்-இபிஎஸ் சொத்து மதிப்பு தொடர்பாக வேட்புமனுவில் தெரிவித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 12ம் தேதி துவங்கியது. முதல் நாளில், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உட்பட, 59 பேர் மனு தாக்கல் செய்தனர். இரு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று (மார்ச் 15) மீண்டும் மனு தாக்கல் துவங்கியது. அதில் முதலமைச்சர் பழனிசாமி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் எளிமையான முறையில் தனியாக வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து ஏழாவது முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதலமைச்சர் பழனிசாமி தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி முதலமைச்சர் பழனிசாமிக்கு 2016-ல் ரூ.3.14 கோடியாக இருந்த அசையும் சொத்து, 2021ல் ரூ.2.01 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், 2016-ல் ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்து 2021ல் ரூ. 4.68 கோடியாக உள்ளது.. மேலும், 2016-ல் ரூ.33 லட்சமாக இருந்த கடன் தற்போது ரூ.29.75 லட்சமாக குறைந்துள்ளது.
குறிப்பாக 2016ம் ஆண்டில் முதலமைச்சரின் சொத்து விவர பட்டியலில், அவர் மற்றும் அவருடைய மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் பெயரில் காட்டப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2021ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்து மதிப்பு பட்டியலில் முதலமைச்சர் பழனிசாமி, அவரது மனைவி மற்றும் இந்து கூட்டுக்குடும்பம் என்ற அடிப்படையில் சொத்து விவரங்கள் காட்டப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் பழனிசாமியின் கையிருப்பில் ரூ.6 லட்சம், அவரது மனைவிடம் ரூ.2 லட்சம், இந்து கூட்டுக்குடும்ப கையிருப்பு ரூ.11 லட்சமாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி முதலமைச்சர் பழனிசாமியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 கோடி அளவிற்கு குறைந்துள்ளதாக வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.
இதேபோல் போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் வேட்புமனுவில் உள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது வேட்புமனுவில் தாக்கல் செய்த அவரது சொத்து மதிப்பை விட தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. அவரது அசையும் சொத்து 843 சதவீதம் உயர்ந்துள்ளது. 2016ல் பன்னீர்செல்வத்தின் அசையும் சொத்து ரூ.55 லட்சமாக இருந்தது. தற்போது ரூ.5.19 கோடியாக உள்ளது. அதேபோல், அசையா சொத்தும் 169 சதவீதம் உயர்ந்துள்ளது. 2016ல் ரூ.98 லட்சமாக இருந்த அசையா சொத்தின் மதிப்பு இப்போது ரூ.2.64 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், அவருக்கு பூர்வீக சொத்து, நிலங்கள் எதுவும் இல்லை எனவும், தனது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story