ச.ம.க.,ஐ.ஜே.கே. கட்சிகளுக்கு பொதுசின்னம் வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ச.ம.க.,ஐ.ஜே.கே. கட்சிகளுக்கு பொதுசின்னம் வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 16 March 2021 2:24 PM IST (Updated: 16 March 2021 2:24 PM IST)
t-max-icont-min-icon

சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு பொதுசின்னம் வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பொதுவான சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்குகளில் தேர்தல் ஆணையத்திற்கு இன்றே விண்ணப்பிக்க சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம் கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேட்பு மனு தாக்கல் துவங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே இக்கட்சிகள் தங்களுக்கு பொதுவான சின்னம் வழங்க வேண்டும் என்று கோரி விண்ணப்பங்களை அனுப்பி இருக்க வேண்டும்.

இக்கட்சிகள் மார்ச் 1-ம் தேதியே விண்ணப்பித்த போதிலும் விண்ணப்பத்தில் நிர்வாகிகளின் கையெழுத்து இல்லாததால் அவை நிராகரிக்கப்பட்டதாகவும், அந்த குறைபாடு கலையப்பட்டு மீண்டும் விண்ணப்பிக்கும்போது அந்த காலக்கேடு (7-ம் தேதி) நிறைவடைந்து விட்டதாகவும், அந்த அடிப்படையில் இக்கட்சிகளின் கோரிக்கையை பரீசிலிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், ’வாக்குரிமை எவ்வளவு முக்கியமானதோ அதேபோல தேர்தலில் போட்டியிடும் உரிமையும் முக்கியமானது’ என குறிப்பிட்டனர்.

இதனை தொடர்ந்து கட்சிகள் தாக்கல் செய்த விண்ணப்பங்களை மறுபரீசிலனை செய்ய தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இந்த மூன்று கட்சிகளும் உடனடியாக அதாவது இன்றே அந்த விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பங்களை பரீசிலித்து நாளைக்குள் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இந்த வழக்குகளை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Next Story