“தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தான் தற்போது கதாநாயனாக திகழ்கிறது” - திமுக எம்.பி. கனிமொழி


“தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தான் தற்போது கதாநாயனாக திகழ்கிறது” - திமுக எம்.பி. கனிமொழி
x
தினத்தந்தி 16 March 2021 7:29 PM GMT (Updated: 16 March 2021 7:29 PM GMT)

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தான் தற்போது கதாநாயனாக திகழ்கிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

தூத்துக்குடி,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி புதுக்கோட்டை சத்யா திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு ஓட்டப்பிடாரம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சண்முகையாவை அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தான் தற்போது கதாநாயனாக திகழ்கிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு, குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவசமாக செல்ல பஸ் வசதி என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மூலமாக மாபெரும் வெற்றியை பெற முடியும். இந்த வெற்றியின் மூலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வருவார்.

இந்த தேர்தல் என்பது ஆட்சி அதிகாரத்தை மட்டுமல்ல நம் கொள்கைகளையும், தமிழகத்தையும் மீட்டெடுக்க கூடிய தேர்தல். தமிழகத்தில் அ.தி.மு.க.வின் பின்னால் இருந்து கொண்டு பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. அதைத் தெரிந்துகொண்டு நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கட்டிக்காத்த சமூகநீதியை அ.தி.மு.க., பாரதீய ஜனதாவிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டிய தேர்தல். பாரதீய ஜனதா, அ.தி.மு.க.வை பயன்படுத்தி தமிழகத்திற்கு எதிரான கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அதில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் தான் இந்த தேர்தல். எனவே, நாம் அனைவரும் இந்த தேர்தலில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story